பகவத்சிங்கு முதலிய விடுதலை வீரர்கள் கொள்கையில் இவர் மிகுந்த பற்றுடையராய் இருந்தனர். 1931இல் ஆங்கில ஆட்சியாளர் அவர்களைத் தூக்கிக் கொன்றபோது, இவர் உணர்ச்சிமிக்க பாடல்கள் பாடி வருந்தினர். (அப் பாடல்கள், ‘புலவர் குழந்தை பாடல்’ என்னும் நூலில் உள்ளன.) 1948இல், சென்னையில் நடந்த திருக்குறள் மாநாட்டில், பகுத்தறிவுக் கேற்ப - தமிழ் மரபு பிறழாமல் - திருக்குறளுக்கு ஓர் உரை எழுதப் பெரியார் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட குழுவில் - நாவலர் சோமசுந்தர பாரதியார் முதலிய ஐவருள் புலவர் குழந்தையும் ஒருவராவர். இவரே தனித்து அப்பணியை மேற்கொண்டு, திருக்குறளுக்குப் பகுத்தறிவுக் கேற்பச் சிறந்ததோர் உரையெழுதி வெளியிட்டனர். ‘திருக்குறள் - குழந்தையுரை’ என்னும் அவ்வுரையை இவர் இருபத்தைந்து நாட்களில் எழுதி முடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அறிஞர் அண்ணா அவர்கள் ‘விடுதலை’ ஆசிரியராக ஈரோட்டில் இருந்தபோது, அண்ணா அவர்களோடு இவர் நெருங்கிப் பழகி வந்தனர். அப்போதெல்லாம் அண்ணா அவர்கள் இவரைப் பேர் சொல்லாமல் ‘புலவர்’ என்றே அழைத்து வந்தனர். பிறரும் அவ்வாறே அழைத்து வந்தமையால், ‘புலவர்’ என்பது இவரது இயற்பெயரே போலாகிவிட்டது. இறுதிவரை அண்ணா அவர்கள் இவரை அவ்வாறேதான் அழைத்து வந்தனர். அறிஞர் அண்ணா அவர்கள் இவர்பால் மிக்க அன்பும் மதிப்பும் உடையவராக இருந்துவந்தனர். தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களும் அவ்வாறே இவர்பால் அன்பும் மதிப்பும் உடையவராக இருந்துவருகின்றனர். அவ்வாறே மற்றத் திராவிடர் கழக, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களும், தோழர்களும் இவர்பால் மிக்க அன்பும் மதிப்பும் உடையவர்களாக இருந்துவருகின்றனர். தமிழ் மக்கள் எல்லோருமே புலவர் குழந்தையைத் தங்கள் தமிழ்க் குழந்தை எனக் கொண்டுள்ளனர் என்பது மிகையாகாது. புலவர் குழந்தை அவர்கள் பெருங்கவிஞர் மட்டுமல்லர். இவர் ஒரு சிறந்த எழுத்தாளர்; கேட்போர் வேட்கும் வண்ணம் பேசும் பெரும் பேச்சாளர். இவருடைய எழுத்தும் பேச்சும் உண்மையும் உறுதியும் அஞ்சாமையும் ஆய்வும் செறிந்த புரட்சிக் கனல் கக்கும் இயல்புடையவை எனல் மிகையாகாது. இவருடைய செய்யுள் நடையும் உரைநடையும் எளிய இனிய தனிச் செந்தமிழில் அமைந்தவையாகும். இவர் நூல்களெல்லாம் தமிழுக்கும் தமிழர்க்கும் ஆக்கந் தரும் வகையிலேயே அமைந்துள்ளன. | |
|
|