பக்கம் எண் :


80புலவர் குழந்தை

   
     ‘விருத்தம் எனும் ஒண்பாவில் உயர்கம்பன்’ என இதுகாறும் போற்றப்பட்டு வந்த
புகழுரையைப் புலவர் குழந்தை அவர்களின் ‘இராவண காவியம்’ பொய்யாக்கிவிட்டது.
சிந்துப் பாடல்களாலான ‘அரசியலரங்கம்’ என்னும் நூல், வரலாறு என அறியாமலே
இலக்கியச் சுவைப்படத் தமிழக வரலாற்றினை அறிந்தின்புறும் வகையில் அமைந்துள்ளது.
‘காமஞ்சரி’ என்னும் செய்யுள் நாடக நூல், பேராசிரியர் சுந்தரம்பிள்ளை அவர்களின்
‘மனோன்மணியத்’ திற்குப் பின், அத்தகைய நாடக நூல் இயற்றப்படவி்ல்லை என்னும்
பெருங்குறையினைப் போக்கி, அதனைவிடச் சிறந்த நூல் என்னும் புகழுடன்
இயன்றுள்ளது. ‘நெருஞ்சிப்பழம்’ எனும் நூல், தமிழில் இதுகாறும் வெளிவராத கற்பனைக்
கருவூலமான காதற் பழமாகும்.

     புலவர் குழந்தை அவர்களின் புலமைத்திறன், செய்யுளியற்றுவதுடன் மட்டும்
அமைந்துவிடவில்லை; சிறந்த உரை எழுதுவதிலும் வல்லுநர் என்பதனை இவர்தம்
‘திருக்குறள் - குழந்தையுரை’, ‘தொல்காப்பியப் பொருளதிகார உரை’, ‘நீதிக் களஞ்சியம்
உரை முதலிய உரைகளைக் கண்ணுறுவோர் எளிதில் அறியலாம். இவரது வரலாற்றுப்
புலமைக்குக் ‘கொங்குநாடு’ என்னும் நூல் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. இதற்குமுன்
இத்தகைய நூல் வெளிவரவில்லை.

     புலவர் குழந்தை அவர்கள் தம் தாய்மொழியிடத்துக் கொண்டுள்ள அளவுகடந்த
பற்றுக்கும், தமிழ்மொழி யாதொரு குறைபாடுமின்றி வளமுற்றுத் திகழ வேண்டும் என்னும்
பேரார்வத்திற்கும் பெருநோக்கிற்கும் சான்றாகத் திகழ்கிறது. ‘தமிழெழுத்துச் சீர்திருத்தம்’
என்னும் ஆராய்ச்சி நூல். ‘தொல்காப்பியர் காலத் தமிழர்’, ‘பூவா முல்லை’ ‘திருக்குறளும்
பரிமேலழகரும்’ என்னும் நூல்கள் புலவரின் ஆராய்ச்சித் திறனுக்கு எடுத்துக்காட்டாகத்
திகழ்கின்றன.

     ‘நாங்களும் கவி எழுதுகிறோம்’ என ஒரு சிலர், யாப்பமைதியற்ற தப்புந் தவறுமான
கவிகள் எழுதி அச்சிட்டு நூல்வடிவில் வெளியிட்டும், செய்தித்தாள்களில் வெளியிட்டும்
தமிழ்ச் செய்யுள் மரபைச் சிதைத்து வருவது கண்டு இவர் பெரிதும் வருந்துவர்.
அத்தகைய கவிகள் தமிழ்மொழியைச் சீர்குலைக்கும் என்பதை அக் கவிஞர்களைக்
காணும்போது எடுத்துக்கூறத் தயங்கார்; தப்புந்தவறுமான கவிகளை நன்கு
திருத்தித்தருவர். மோனையும் எதுகையும் நன்கு அமையுமாறு உரிய ஓசை
நயங்குன்றாமல் செய்யுள் செய்ய வேண்டும் என்பது இவரது உறுதியான கொள்கையாகும்,
கவியரங்கங்கட்குத் தலைமை தாங்கும்போது இக்கருத்தை வற்புறுத்திக்கூற இவர் சிறிதும்
பின்வாங்குவது கிடையாது. இவர்