குழந்தையை உவந்து பாராட்டியது. 23-5-71 அன்று, பவானிக் குமாரபாளையம் பகுத்தறிவுக் கழகத்தார், பொதுக்கூட்டம் போட்டுப் புலவரைப் பாராட்டினர். 6-6-71இல் புதுவையில் நடந்த ‘இராவணன் விழா’வில் புலவரைப் பாராட்டி, புதுவை முதல்வர் மாண்புமிகு, பரூக் மரைக்காயர் அவர்கள் பொன்னாடை போர்த்துப் பெருமைப்படுத்தினர். 4-9-71இல் விழுப்புரம் பகுத்தறிவாளர் கழகத்தார் பாராட்டுக் கூட்டம் நடத்திப் பாராட்டிதழ் படித்து வழங்கித் தந்தை பெரியார் அவர்களால் புலவர்க்குப் பொன்னாடை போர்த்துச் சிறப்பித்தனர். பவானி கலைஞர் கருணாநிதி மக்கள் பணி மன்றத்தினர் 6-10-71 அன்று பவானியில் பாராட்டுக் கூட்டம் நடத்தி, தந்தை பெரியார் அவர்களால் புலவர் குழந்தை அவர்கட்குப் பொன்னாடை போர்த்துப் பெருமைப்படுத்தினர். தந்தை பெரியார் அவர்கள், தமிழ்ப் புலவர்களெல்லாம் தமிழரை இழிவுபடுத்தும் புராணக் கருத்துக்களையே பாடி வந்தனர். அதற்கு மாறாக இராவண காவியத்தைச் செய்து தமிழரின் இழிவைப் போக்கிய புலவர் குழந்தை அவர்களைப் பாராட்டுகிறேன். அத்தகைய இராவண காவியத்தைத் தமிழ் மக்கள் படித்துப் பயன்பெற வேண்டும். இக்காவியத்தைப் பள்ளிகளில் பாடமாக வைக்க வேண்டும் என்று பேசினார். புலவர் குழந்தை இப்போது பவானியையே தம் சொந்த ஊராகக் கொண்டுள்ளார். பவானியில் புலவர்க்குச் சொந்த வீடும் நிலபுலன்களும் உள்ளன. இவர் ஆசிரியப் பணியினின்றும் ஓய்வு பெற்றனரேயன்றித் தமிழ் வளர்ச்சித் தொண்டாற்றுவதினின்றும் - தமிழின உணர்ச்சித் தொண்டாற்றுவதினின்றும் ஓய்வு பெற்றாரிலர். எப்போதும் படித்துக்கொண்டும், பாட்டும் நூலும் கட்டுரையும் எழுதிக்கொண்டு மிருப்பதையே இவர் தம் பொழுது போக்காகக் கொண்டுள்ளார். கூடுதுறை போகும் வழியிலுள்ள புலவர் வீட்டு வழியே செல்வோர், இவர் எப்போதும் எழுதிக் கொண்டிருப்பதைக் கண்டு வியப்பர். தமிழ், தமிழினம், தமிழ்நாடு என்பன இவர்தம் முந்நாடியாகும். தமிழுக்கு, தமிழர்க்கு, தமிழ் மரபுக்கு ஒவ்வாதவற்றை - தகாதவற்றை - வன்மையாகக் கண்டிப்பதிலும், தக்கவற்றை ஒளிவு மறைவின்றி எடுத்துக் கூறுவதிலும் இவர் மிக்க நெஞ்சுரமுடையவர்; எதையும் இனிய சொற்களால் வெளிப்படையாக எடுத்துரைக்கும் இயல்புடையவர். புலவர் குழந்தை ஒழுக்கத்தை உயிரினும் பெரிதாகக் கொண்டவர். ஒழுக்கக் கேடான எதையும் செய்ய அஞ்சுபவர். | |
|
|