பக்கம் எண் :


இராவண காவியம் 83

   
     இவர் ஒரு புரட்சிப் புலவரே எனினும், அமைதியும் அடக்கமும் உடையவர்;
ஆடம்பரமற்ற எளிய வாழ்க்கையுடையவர்.

     இவர் பழகுதற்கு மிகவும் இனியர்; கடமை தவறாதவர்; எதிர்க்கட்சியினராலும்
மாற்றுக் கொள்கையினராலும் - நன்கு மதிக்கத்தக்க நேர்மையுடையவர். காங்கிரசுக்
கட்சியாட்சியில், கறுப்புச் சட்டைக்காரராகிய இவர், இருபத்திரண்டு ஆண்டுகள் பவானி
நாட்டாண்மைக் கழக உயர்நிலைப் பள்ளியிலேயே பணியாற்றி ஓய்வு பெற்றதொன்றே
இவர்தம் நேர்மைக்கும், கடமையுணர்ச்சிக்கும் போதிய சான்றாகும்.

     புலவர் குழந்தை அவர்களின் வாழ்க்கைத் துணைவியார் முத்தம்மையார்,
கல்வியறிவு வாய்க்கப் பெறாதவரே யொழியப் பொது அறிவு நிரம்பப் பெற்ற தன்மானக்
கொள்கையுடையவர்; தம் கணவரின் கொள்கைக் கேற்ப இனிது இல்லறம் நடத்தும்
கடப்பாடுடையவர். இங்ஙனம் மனைத்தக்க மாண்புடைய ஒருவரை வாழ்க்கைத்
துணைவியாகப் பெற்றமையான் புலவர் குழந்தையின் இல்வாழ்க்கை பண்பும் பயனும்
உடையதாக மிளிர்கின்றது.

     இங்ஙனம் வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவராகிய புலவர் குழந்தை அவர்கட்குச்
சமத்துவம், சமரசம் என்னும் இரு பெண் மக்கள் உள்ளனர். இவர்களுள், சமத்துவம்
B.Sc. (Ag.) பட்டம் பெற்றவர்; பதினேழாண்டுக் காலம், கோவை வேளாண்மைக் கல்லூரி
ஆராய்ச்சித் துறையில் பணியாற்றினார். இவர்தம் கணவர், திரு,அ.தங்கவேல், B.A.
அவர்கள், கோவை பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணியாற்றி வந்தார். இப்போது
இருவரும் வேலையை விட்டுவிட்டுத் தம் சொந்த ஊரான சேலம் கருப்பூரில் இருந்து
வருகிறார்கள். திரு.தங்கவேல், கருப்பூர் நகரத் தி.மு.க. தலைவராகத்
தொண்டாற்றிவருகிறார். இவர்கட்குச் செல்வக்குமார், மோகன், ஆனந்து என்னும்
ஆண்மக்கள் மூவர் உள்ளனர்.

     இளைய மகள் சமரசம் B.A. B.T. அவர்கள், பவானி அரசினர் மகளிர் உயர்நிலைப்
பள்ளித் தலைமை ஆசிரியை ஆகப் பணியாற்றி வருகிறார். இவர்தம் கணவர்,
திரு.சி.கந்தசாமி, B.A., B.T. அவர்கள், பவானியை அடுத்த ஆப்பக்கூடல் சக்தி சர்க்கரை
ஆலையினரால் நடத்தப்படும் சக்தி உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராக
இருந்துவருகிறார். இவர்கட்கு அமுது என்னும் மகளும், எழில் என்னும் மகனும்
உள்ளனர். இவர்கள் புலவருக்கு உதவியாகப் புலவர் வீட்டிலேயே இருந்துவருகிறார்கள்.
புலவர் குழந்தை அவர்கள், மக்கள், மருமக்கள், பேர்த்தி பேரர்களுடன் இன்புற்று
அமைதியுடன் தமிழ்த் தொண்டாற்றி வருகிறார்.