பக்கம் எண் :


84புலவர் குழந்தை

   
இராவண காவியக் கதைச் சுருக்கம்
 
     மிகப் பழங்காலத்தே தமிழ்நாடு இன்றுள்ள எல்லைக்குட்பட்டிருக்கவி்ல்லை; வடக்கில் பனிமலைகாறும் பரவியிருந்தது; அயல்நாடர் குடியேற்றத்தால் பின்னர் விந்தமலையை வடக்கெல்லையாகக் கொண்டது. தென்கடல் நிலமாக இருந்தது. அது, இன்றுள்ள குமரிமுனைக்குத் தெற்கில் ஆயிரங் கல்லுக்குமேல் அகன்றிருந்தது. கிழக்கிலும் வங்கக் கடலும், சாவக முதலிய தீவுகளும் ஒரே நிலப்பரப்பாயிருந்தது. தென்னிலத்தில் குமரிமலை, பன்மலை முதலிய மலைகள் ஓங்கியுயர்ந்திருந்தன. குமரிமலையில் குமரியாறும், பன்மலையில் பஃறுளியாறும் தோன்றி அந்நிலத்தை வளஞ்செய்தன.

     குமரியாற்றுக்கும் பஃறுளியாற்றுக்கும் இடைப்பட்ட நிலம் பெருவளநாடு எனவும், பஃறுளிக்கும் தென்கடலுக்கும் இடைப்பட்ட நிலம் தென்பாலிநாடு எனவும் வழங்கின; பஃறுளியாற்றங் கரையில் இவ்விரு நாடுகளின் தலைநகரமான மதுரை இருந்தது. குமரிக்கும் விந்தத்திற்கும் இடைப்பட்ட நிலம் திராவிடம் என வழங்கிற்று. அது வேளிர் என்னும் சிற்றரசர் பலரால் ஆளப்பட்டு வந்தது. திராவிடத்தின் மேற்கில் சேரநாடு இருந்தது. திராவிடத்தின் கிழக்கில் சோழநாடு இருந்தது. இவ் வைவகைப்பட்ட தமிழகம் - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நானிலமாக மக்கட்கு வேண்டிய எல்லாச் செல்வமும் பொருந்தியிருந்தது.

     நானில மக்களும் தங்களுக்குள் ஒரு தலைவனை ஏற்படுத்திக் கொண்டு அவன் ஆணைக்குட்பட்டு வாழ்ந்து வந்தனர். பின்னர்த் தமிழக முழுமைக்கும் ஒரு மாபெருந் தலைவனை ஏற்படுத்தினர். அவன் தமிழகத்தின் நடுவில் - இன்றுள்ள இலங்கையின் தென்மேற்கில் இருந்த ஒரு தென்னகரில் இருந்து தமிழகத்தை ஆண்டு வந்தனன். அப்பண்டையோன் மரபில் வந்தவரே பாண்டியராவர். அம்மாபெருந் தலைவன் வழிவந்த ஒருவன் தன் மகனைத் தென்னாட்டுக்கும், மற்றிரு தமிழ்த் தலைமக்களைச் சோழநாடு, சேரநாடுகட்கும் தலைவராக்கினான். அம்மூவர் வழிவந்தோரே பாண்டிய சோழ சேரராவர்.