கி.மு. 31 திருவள்ளுவர் ஆண்டாகும். தி.மு. 3000 ஆண்டுகளுக்கு முன் தென்கடல் பொங்கித் தென்பாலியையும், கிழக்கு நாட்டின் பெரும்பகுதியையும் வாய்க்கொண்டது; பின், தி.மு.2500இல் ஒருமுறை கடல் பொங்கிப் பெருவளத்தின் பெரும்பகுதியையும், கிழக்கு நாட்டையும் விழுங்கிற்று. பின் தி.மு. 700இல் ஒருமுறை கடல் பெருகித் திராவிடத்தின் ஒரு பகுதியையும் உண்டேப்பமிட்டது. இரண்டாங் கடல்கோளின் பின்னர் இலங்கை உண்டானது. இலங்கை நாட்டின் நடுவில் இந்த முக்கூடல் மலைமீது இலங்கை நகர் இருந்தது. மூன்றாங் கடல்கோளுக்கு முன் இலங்கையிலிருந்து தமிழகத்தை யாண்டுவந்த தமிழரின் மாபெருந் தலைவர் வழிவந்த வச்சிரவாவுவின் மனைவியான கேகசி என்பாள் இராணவன், கும்பகன்னன், பீடணன் என்னும் மூன்று ஆண்மக்களையும், காமவல்லி என்னும் ஒரு பெண் மகளையும் பெற்றனள். மூத்தவனான இராவணன் முடிபுனைந்து, தமிழகத்தை ஆண்டு வந்தனன். மலைவளங்காணச் சென்ற இராவணனும், திராவிடத்தைச் சார்ந்த முதிரை நகரிலிருந்து முல்லைநாட்டை யாண்டுவந்த மாயோன் மகள் வண்டார்குழலியும் எதிர்ப்பட்டுக் காதல்கொண்டு மணம் புரிந்து இல்லறம் நடத்தி வந்தனர். வண்டார்குழலி சேயோன் என்னும் செம்மலைப் பெற்றனள். தமிழகத்தின் வடக்கெல்லையான விந்தச்சாரல் பல சிறு நாடுகளாகப் பாகுபட்டிருந்தது. வடநாட்டில் ஆரியர் என்னும் ஓரினத்தினர் வாழ்ந்து வந்தனர். அவர்களில் கல்வியறிவுள்ள முதியோர் சிலர், இராவணன் தோன்றுவதற்கு நெடுநாள் முன்னரே துறவுக் கோலத்துடன் தமிழகம் போந்தனர். தமிழ்மக்கள் அன்னாரை அன்புடன் வரவேற்று ஊணுடை யுதவி்ப் போற்றி வந்தனர். அவர் தமிழ் கற்றும், தமிழரிடம் நெருங்கிப் பழகியும் வந்தனர். இவ்வாறே பின்னரும் பின்னரும் பலர் வந்தனர். நாளடைவில் அவர் தமிழகம் முழுதும் போந்து, தமிழந்தணருடனும், புலவருடனும் நெருங்கிப் பழகி அரசர் உறவையும் பெற்றனர். நாளாகவாக ஆரிய இளைஞரும் வந்து, தமிழ்ச் செல்வ இளைஞரிடம் தோழமை செய்யும் பார்ப்பன வேலையும் சிலர் பார்த்து வந்தனர். நாளடைவில் பலர் பெண்டு பிள்ளைகளுடன் குடியேறி விந்தக் காடுகளில் இலைக்குடில்கள் அமைத்து வாழ்ந்து வந்தனர். அவர் வேள்வி மூலம் உயிர்களைக் கொன்றுண்ணத் தொடங்கினர். தமிழ் மக்கள் அதனைத் தடுத்தனர். அவர் கேட்கவில்லை | |
|
|