பக்கம் எண் :


86புலவர் குழந்தை

   
     இருபாலார்க்கும் போருண்டானது. அம்மக்கட்போர் தமிழாரிய மன்னர் போரானது.
முடிவில் வடவரசர் தோற்றனர். ஆரிய முனிவர்கள் அஞ்சினவர் போல நடித்துப் பல
தமிழரசர்களை வஞ்சித்துக் கொன்றனர். நூற்றுக்கணக்கான தமிழர் கோட்டைகளைத்
தீயிட்டெரித்தனர்.

     விந்தச்சாரலி லிருந்த இடைவள நாட்டை யாண்டு வந்த தாடகை யென்னும்
தமிழரசி இராவணனது துணையை வேண்டினள். அவன் சுவாகு என்னும்
படைத்தலைவனைப் பெரும்படையுடன் அனுப்பினான். சுவாகு இடைவளஞ் சென்று
ஆரியப் புலைவேள்வியை யகற்றிக் காத்துவந்தான். அதனால், கோசிகன் என்னும் ஆரிய
முனிவன் வேள்வி செய்ய முடியாது மனமுடைந்து சென்றனன்.

     வடநாட்டில் சரயுவாற்றங் கரையில் உள்ள அயோத்தி்யில் தசரதன் என்னும்
சிற்றரசன் ஒருவன் இருந்தான். அவன் கோசலை, சுமத்திரை என்னும் இரு
மனைவியருடனும், பல காதல் மகளிருடனும் களித்து வந்தான்; தனது தோள்வலியால் பல
நாடுகளை வென்று கோசலம் என்னும் நாட்டை நிறுவிப் பேரரசனானான். பின் தன்
தகுதிக்கேற்பப் பேரரசனான கேகயன் மகள் கைகேசியைக் கேட்டான். அவன் மறுக்கவே,
தனது நாட்டைக் கைகேசிக்குப் பரிசமாகக் கொடுத்து அவளை மணந்தனன்.

     கிழப்பருவமுற்றும் பிள்ளையில்லாது வருந்திய தசரதன், குலகுரு வசிட்டர் சொற்படி
கலைக்கோட்டு முனிவனைக் கொண்டு குதிரை வேள்வி செய்தனன்; ஓர் ஆண் குதிரை
படையுடன் ஓராண்டில் நாடு சுற்றி மீண்டது. முனிவர் வேள்வி தொடங்கினர்.
அவ்வேள்விக் குதிரையைக் கோசலை வாள் கொண்டு மூன்று வெட்டில் வெட்டி
வீழ்த்தினாள். கோசலை தன் கணவனைத் தழுவுவது போல் வெட்டுண்ட அவ்வாண்
குதிரையைத் தழுவி அவ்விரவைக் கழித்தனள். சடங்குகள் முடிந்த பின் பல பகல்
குதிரை, ஆடு, மாடு, ஆமை, பாம்பு, பறவை முதலிய பன்னூற்றுக் கணக்கான
உயிர்களைக் கொன்றுதின்று சோமக் கள்ளுண்டு இன்புற்றனர். தசரதன் கலைக்கோடர்
முதலிய வேள்வி யாசிரியர் மூவர்க்குங் கோசலை முதலிய மூன்று மனைவியரையும்
காணிக்கையாகக் கொடுத்தனன். அவர்களுடன் கனிமொழி பேசிக் கூடிக் கலந்தின்புற்று
மூவரும் கருப்பமுறவே அவர்கள் அம்மூவருக்கீடான பொருள் பெற்றுக் கொண்டு
அம்மூவரையும் தசரதனிடம் ஒப்பித்துச் சென்றனர். கருப்ப முதிர்ந்து கோசலை
இராமனையும், கைகேசி பரதனையும், சுமத்திரை இலக்குவ சத்துருக்கரையும் பெற்றனர்.
மக்கள் வளர்ந்து மணப்பருவ முற்றனர்.