மனமுடைந்து சென்ற கோசிகன் அயோத்தியை யடைந்து வேள்வித் துணையாக இராமலக்குவரை அழைத்துக் கொண்டு இடைவள நாட்டை யடைந்து ஒரு சோலையில் தங்கினர். அங்கே தனித்து வந்த தாடகையை முனிவன் சொற்படி இராமலக்குவர் கொன்றனர். அங்கிருந்து சென்று தன் குடிலையடைந்து முனிவன் வேள்வி தொடங்கினன். சுவாகு இளவரசனான மாரீசனோடு சென்று வேள்வியைத் தடுத்தான். இராமன் வாகுவைக் கொன்றான். தன்னிலைமையுணர்ந்த மாரீசன் ஆங்கு நின்றும் மீண்டனன்.மூவரும் வேள்வி முடித்துத் தமிழகத்தை நீங்கினர். தூதரால் இதனையறிந்த இராவணன், விந்த நாட்டையாண்டு வந்த தன் தங்கை காமவல்லிக்குத் துணையாகப் பெரும்படையை அனுப்பினான். கரன் என்னும் படைத்தலைவன் அப்பெரும்படையை ஆங்காங்கு அமைத்துக் காத்து வந்தனன். காமவல்லியின் காப்பில் விந்தநங்கை புலைவேள்வியற்றுப் பொலிந்தனள். வேள்வி முடித்துச் சென்ற மூவரும் மிதிலையை யடைந்து சனகன் விருந்தினராக இருந்தனர். முனிவர் கட்டளைப்படி இராமன் சீதையின் திருமணத்திற் கேதுவான வில்லை வளைத் தொடித்தனன். சனகன் மகிழ்ந்து, தசரதன் முதலியோரை வரவழைத்துச் சீதையை இராமனுக்கும், ஊர்மிளையை இலக்குவனுக்கும். தன் தம்பி குசத்துவசன் மகளிரான மாளவியைப் பரதனுக்கும், சுதகீர்த்தியைச் சத்துருக்கனுக்கும் மணஞ்செய்து கொடுத்தனன். தசரதன் சனகனிடம் விடைபெற்று மக்கள் மருமக்களுடன் அயோத்தியை யடைந்தனன். தசரதன், இராமன் மீதுள்ள பற்றினால் பரதனுக்குரிய நாட்டை இராமனுக்காக வெண்ணித் தந்திரமாகப் பரதனைச் சத்துருக்கனுடன் அவன் பாட்டனூருக் கனுப்பிவிட்டு இராமனை நாட்டு மக்களிடம் பழகச் செய்தனன். இவ்வாறு பன்னிரண்டாண்டுகள் சென்ற. தசரதன் அரசர்களையும் குடிமக்களையும் கலந்து இராமனுக்கு இளவரசுப் பட்டங் கட்ட முடிவு செய்தனன். இதையறிந்த கைகேசியின் தோழியான மந்தரை என்பாள் அரசன் சூழ்ச்சியைக் கைகேசியிடம் கூறி முடிசூட்டுதலைத் தடுக்கும்படி வேண்டினாள். கைகேசி தசரதனிடம் முன்னர்ச் சம்பரனை வென்றதற்காகக் கொடுத்த இரு வரங்களில் ஒன்றால் பரதன் நாடாளவும் மற்றொன்றால் இராமன் பதினான்காண்டு காடாளவும் செய்ய வேண்டும் எனக் கேட்டாள். தசரதன் சூழ்ச்சி பலிக்கவில்லை. இராமன், சீதை, இலக்குவன் மூவரும் தேரேறிக் காடு சென்றனர். | |
|
|