மறவரால் வளைக்கப்பட்ட இராமலக்குவர் அவரை யோட்டிச் சென்று இலைக் குடியில் சீதையைக் காணாது வருந்தித்தேரடிப் பாதையைப் பின்பற்றிச் சென்று ஒரு முனிவன் குடிலையடைந்தனர். அவன், சீதையை இராவணன் இலங்கை கொண்டு செல்வதையும், வாலியால் துரத்தப்பட்டு மதங்கரிடமுள்ள சுக்கிரீவன் வரலாறுங் கூறியனுப்பச் சென்று மதங்கரைக் கண்டு நிகழ்ந்தது கூறினர். அங்கே அனுமன் வர மதங்கர் அவர்களை அறிமுகப்படுத்தி அனுமனுடன் அனுப்பச் சென்று சுக்கிரீவனைக் கண்டு வரவுகூறி உதவி நாடினர். அவன் என் அண்ணனைக் கொன்று எனக்கு அரசீந்தால் உனது மனைவியை மீட்க உதவுவேன் என்றான். இராமன் அதற்கிசைந்து வாலியுடன் பொரச் சொல்லி இருவரும் பொரும்போது மறைவிலிருந்து அம்பெய்து வாலியைக் கொன்று சுக்கிரீவனைக் கிட்கிந்தைக் கரசனாக்கி மதங்கர் நிலையை அடைந்திருந்தான். சீதையைப் பார்த்துவரத் தேவியோடு சென்ற இராவணன், இராமன் வாலியைக் கொன்று சுக்கிரீவன் படையோடு இலங்கையை முற்ற வரப்போவதாகக் கூறிச் சென்றனன். சீதை, தன்னால் இலங்கை போர்க்களமாவதை எண்ணிப் புலம்பிக் கொண்டிருக்கையில் பீடணன் மகள் திரிசடை அங்கு வரவே சீதை அவளிடம் தன் கணவன் படையெடுத்து வர விருப்பதைக் கூறித் தன்னால் இலங்கை போர்க்களமாகுமே என வருந்த, திரிசடை இராவணன் திறமை கூறி, இராமனால் இலங்கையை முற்ற முடியாதெனத் தேற்ற, சீதை எனக்கு அச்சமாக இருக்கிறது, உன் தந்தையிடம் சொல்லி என்னை எப்படியாவது என் கணவனிடம் சேர்த்துப் போரில்லாமல் செய்வாயென வேண்டினாள். திரிசடை அவ்வாறே தன் தந்தையிடம் சென்று கூற, அவன் சரியெனக் கூறி யனுப்பிவிட்டுத் தானும் இராமனை யடைந்து சுக்கிரீவன் போல் அரசனாக எண்ணி அதைத் தன் நண்பன் நீலனிடம் கூறி ஆவன செய்யுமாறு ஏற்பாடு செய்திருந்தனன். இராமன் சீதையைப் பார்த்துவரும்படி சுக்கிரீவனது அமைச்சனான அனுமனை அனுப்பினன். அனுமன் இலங்கை சென்று ஓர் ஆரியனால் பீடணன் நிலைமை யறிந்து சென்று பீடணன் மனையை யடைந்தான், பீடணன் அனுமனை வரவேற்றுத் தனது எண்ணத்தைக் கூறவே, அனுமன் அவ்வாறே செய்வதாக உறுதி கூறித் திரிசடையுடன் சென்று சீதையைத் தனியாக அழைத்து வந்து இராமன் படையொடு வந்து இலங்கையை யழித்து உன்னை மீட்டுச் செல்வா னெனவே, சீதை திடுக்கிட்டு இராவணன் பெருமை கூறித் தனியாக வரும்படி கூறு மெனக் கூறித் திரிசடையுடன் சென்றனள். | |
|
|