காவியத் தோற்றம் | 28. பண்டெ னுஞ்சொற் பழமையின் பாலுறக் கொண்டு மக்கட் குலமுதற் கூறதா எண்டி சையி னிசைபரந் தின்புறீஇ வண்ட மிழ்மக்கள் வாழ்ந்து வருகையில்; 29. வம்பி லாரியர் வந்து தமிழகம் நம்பி வாழ்ந்த நமரொடி ராமனை வெம்ப கைகொளச் செய்துநம் மேலவர் தம்பெ ருங்குலந் தன்னை யொழித்தனர். 30. சற்று மேதாம் பிறந்த தமிழினப் பற்றி லாத பதர்கள் துணைக்கொடு வெற்றி கண்டனன் வெய்யனி ராமனும் இற்றொ ழிந்த திறைமகன் தொல்குலம். 31. தாய்மை யுற்ற தமிழர் தலைவரை ஆய்மை யற்றஅவ் வாரிய ராமனும் தூய்மை யற்ற துணைக்கொட டொழித்ததை வாய்மை யற்ற வடவன்வான் மீகியும்; 32. வழிவ ருந்தமிழ் மக்கள் அறிகுறின் ஒழிவ ரும்பகை யோடுகெ டாப்பெரும் பழிவ ருமெனப் பைந்தமிழ் மக்களை அழிவ ருங்கொ டரக்கர்க ரென்றனன். 33. திருக்கு லாந்தமிழ் மக்களைத் தீக்குண அரக்க ரென்றும் அஃறிணை யல்லவோர் குரக்கி னமென்றுங் கூறிவான் மீகியும் பரக்க நாத்தழும் பேறப் பழித்தனன். 34. தம்மி னப்பகை சார்தமிழ்க் கம்பனும் அம்மு ழுப்பொய் யதையெந் தமிழர்கள் மெய்ம்மை யான விழுக்கதை யாமென அம்ம வோநம்பி டச்செய்து விட்டனன். ------------------------------------------------------------------------------------------ 29. வம்பில் - புதிதாக, கேடுசூழ. 31. தாய்மை - தாய்போல அன்புடைமை. 34. தம் இனப் பகை - தமிழினப் பகைவனான இராமன் | |
|
|