பக்கம் எண் :


98புலவர் குழந்தை

   
           35.     கம்பன் செய்பொய்க் கவியினை மெய்யென
                  நம்பி யையகோ நந்தமிழ் மக்களும்
                  தம்ப ழம்பெருந் தாய்க்குல மக்களை
                  வெம்ப கைபோல் வெறுத்திட லாயினர்.

           36.     தங்கு லப்பகை தன்னைக் கடவுளா
                  எங்கு லத்தவ ரெண்ணி வணங்கியே
                  கங்கு லைப்பகற் கால மெனக்கொளும்
                  திங்கள் போலத் திறம்பிட லாயினர்.

           37.    அம்ம யக்க மகன்று தமிழர்கள்
                  தம்மி னத்துத் தலைவர் பெருமையைச்
                  செம்ம னத்துத் தெளிந்திடச் செய்குதல்
                  எம்மி னத்தி னிருங்கட னாகுமால்.

           38.     விழுந்த ஞாயிறு மேக்கெழு காலையில்
                  ஒழிந்து வல்லிரு ளோவுறச் செங்கதிர்
                  பொழிந்து மக்கட்குப் புத்தொளி காட்டல்போல்
                  எழுந்த தேகொலாம் இப்பெருங் காவியம்.

           39.     கரும்பை வேம்பென வேம்பைக் கரும்பென
                  விரும்பி வாழுமெய் யாமை வெருவுற
                  அரும்பி யுண்மை யருந்தமிழ் மக்கள்முன்
                  திரும்பி வாழ்ந்திடச் செய்யுமிக் காவியம்.
 
அவையடக்கம்
 
           40.     ஏசு வார்சிலர் ஈதுண்மை யேயெனப்
                  பேசு வார்சிலர் பேச வெதிர்மனங்
                  கூசு வார்சிலர் கூக்குர லார்சிலர்
                  மாசி லாத்தமிழ் மாக்கதை கேட்கினே.

           41.     வழியெ தென்னும் வரன்முறை மாற்றிய
                  பழிய தென்னும் பகைகொ டுரைவசை
                  மொழிய தென்னும் முறைமை யிலாதவிஃ
                  தொழிய வென்னு மொழிப்பநா மென்னுமே.

-----------------------------------------------------------------------------------------
           35. கவி - கருவியாகு பெயர். 39. எய்யாமை - அறியாமை. முன் -
பண்டைய நிலைக்கு, இராவணன் முதலியோர் அரக்கரல்லர், தமிழர் என்னும் நிலைக்கு.