பக்கம் எண் :


இராவண காவியம் 99

   
           42.     வடக்கி ருந்திங்கு வந்த கதையினைக்
                  கிடக்கை மாற்றிக் கிளந்து வடக்குற
                  நடக்கை யாக்கிய தன்றி நவைபுலப்
                  படக்கி டந்ததீங் கொன்றிலைப் பார்க்கினே.

           43.     பொய்வித் தான புரட்டொடு பூரியத்
                  தெய்வத் தன்மைத் திருட்டை யகற்றியே
                  மெய்வித் திட்டு விளைவின் பயன்கொள
                  உய்வித் தேமலா னொன்றும்வே றின்றிதே.

           44.     கொடுமை யாமனுக் கோதுடை யாரியக்
                  கடிமை வாழ்வி னழுந்துவார்க் கென்செயும்
                  அடிமை வாழ்வி னகன்று விடுதலை
                  அடைய மேவுந் தமிழர்க்கி தாகுமே.

           45.     தமிழர் தாழ்வு தனையெடுத் தோதியே
                  தமிழர் வாழ்வு தனைநிலை நாட்டலான்
                  தமிழ ரென்னு முணர்வு தலைப்படும்
                  தமிழர் யாருந் தலைக்கொளு வாரரோ.

           46.     கோதி லாத குழந்தை குதலையைத்
                  தீது நன்றெனத் தேர்வரோ பெற்றவர்
                  ஈத நந்தமி ழன்கதை யேயிதை
                  ஓது வோனுமீங் குங்கள் குழந்தையே.

           47.     இன்மை யேது மிலாமை யெலாமுணர்
                  நன்மை சேர்தமிழ் நாவலர்ச் சேருமென்
                  புன்மை யான பொருளு மடைந்ததன்
                  தன்மை யாகுநன் னீரின் றகையவாம்.

           48.     வசைம லிந்த மறுக்கெட வண்டமிழ்ப்
                  பசைம லிந்து பயின்று பயன்பெற
                  இசைம லிந்த இராவண காவியம்
                  திசைம லிந்து சிறந்து திகழ்கவே.