இதையும் சேர்த்துத்தான் பஞ்சமுகேஸ்வரர் என்றழைக்கப்படுகிறது. இவ்விடத்தை உணர்த்தி, வெளிப்படுத்தியவர்கள் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ பரமாசார்ய சுவாமிகளே யாவார்கள். இவர்களே 1966ல் இதற்குக் கும்பாபிஷேகம் செய்வித்தார்கள். புடைச்சிற்பங்கள் கண்ணுக்குப் பெருவிருந்து. பஞ்சமுகேஸ்வரர், பார்வதி திருமணம், முருகன், நர்த்தன கணபதி, ஆலிங்கனஈசன், நந்தி, சிலந்தி, யானை, பாம்பு முதலியவை வழிபடும் காட்சி, வியாக்ரபாதர், பதஞ்சலி, நடராஜர், வேடன், பிட்சாடனர், இராவணன், தட்சிணாமூர்த்தி, ஏகபாதர், மச்சாவதாரம் முதலிய உருவங்கள் புடை சிற்பங்களாக மலைப்பாறையில் கீழும் மேலும் செதுக்கப்பட்டுள்ளன. சிவராத்திரியையொட்டிப் பத்து நாட்களுக்கு இத்தலத்தில் பெருவிழா நடைபெறுகிறது. வயதான காலத்தில் ஆதரவின்றித் தவிக்கும் முதியவர்களை ஆதரித்துக் காக்கும் நோக்குடன் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராசாரிய சுவாமிகள் அவர்களால் இத்தலத்தில் ‘விருத்தாசிரமம்’ நடத்தப்பட்டு வருகிறது. இந்நற்பணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் தம்முடைய இடத்தை தந்து உதவியுள்ளது. இத்தலத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சத்திரமும், கல்யாண மண்டபமும் உள்ளன. தேவஸ்தான ‘விருந்தினர்விடுதியும்’ உள்ளது. தெலுங்கு கவிஞரான ‘தூர்ஜாட்டி’ (DHURJATI) என்பவர் இத்தலத்தைப் புகழ்ந்து ‘ஸ்ரீ காளஹஸ்தீஸ்வர மகாத்மியம்’ என்ற பெயரில் கவிதை வடிவில் நூலொன்றை மிகச் சிறப்பாகப் பாடியுள்ளார். விரைநகர் ஆனந்தக் கூத்தர் பாடிய திருக்காளத்திப் புராணமும் ; கருணைப் பிரகாசர் ஞானப் பிரகாசர் வேலப்ப தேசிகர் ஆகிய மூவரும் சேர்ந்து பாடிய தலபுராணமும் இத்தலத்திற்கு உரியன. சேறைக் கவிராயர் உலா ஒன்றும் பாடியுள்ளார். விஜயநகர, காகதீய மன்னர்கள் காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளன. இறைவன் ‘தென்கயிலாயமுடையார்’ திருக்காளத்தி உடைய நாயனார் எனக் குறிப்பிடப்படுகின்றார். முதற் குலோத்துங்கன் காலக் கல்வெட்டு ‘காளத்தி உடையான் மரக்கால்’ என்ற அளவு கருவி இருந்ததாகக் குறிப்பிடுகிறது. சந்தமா ரகிலொடு சாதி தேக்கம்மரம் உந்துமா முகலியின் கரையினில் உமையொடும் மந்தமார் பொழில்வளர் மல்கு வண்காளத்தி எந்தையார் இணையடி என்மனத் துள்ளவே |