மறுநாள் முடிவுறுமாம். சுவாமியின் திருக்கல்யாண விழாவின்போது பொது மக்கள் திரளாகக் கூடித் தத்தம் திருமணங்களைச் சந்நிதியில் செய்து கொள்ளும் வழக்கம் இத்தலத்திலும் உள்ளது. தட்சிண கைலாசம், அகண்டவில்வாரண்யம், பாஸ்கரக்ஷேத்திரம் என்றெல்லாம் புகழப்படும் இத்தலத்தில் பிரவேசிப்பதே முத்தி எனப்படுகிறது. “ஸ்ரீ காளத்தி பிரவேச முத்தி” என்கின்றனர். இங்கு நதி-நிதி-பர்வதம் என்ற தொடர் வழக்கில் உள்ளது. நதி என்பது சந்திரகிரிமலையில் தோன்றிப் பாய்ந்து வருகின்ற சுவர்ணமுகி-பொன்முகலியாற்றைக் குறிக்கும். நிதி-அழியாச் செல்வமான இறைவியும் இறைவனும். பர்வதம் -கைலாசகிரி, இம்மூன்றையும் தரிசிப்பது விசேஷமெனச் சொல்லப்படுகிறது. பொன்முகலி உத்தரவாகினியாதலால் இங்கு அஸ்தி கரைப்பது விசேஷமாகும். பண்டை நாளில் ரிஷிகள் பொன்முகலியில் நீராடி கிழக்கு நோக்கித் தரிசிக்க அவர்கட்கு காட்சி தரவே சுவாமி மேற்கு நோக்கினார் என்ற கருத்து சொல்லப்படுகிறது. ஒரு முக்கிய குறிப்பு. அம்பாள் கருவறையை வலம் வரும்போது வட்டமாகத் தரையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள மூலை இடத்தில் மூன்று தலைகள் சேர்ந்திருப்பது போன்ற சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தினடியில் சக்தி வாய்ந்த யந்த்ரம் இருப்பதால் இங்கு அமர்ந்து ஜபம் செய்வது மிகவும் விசேஷமாகச் சொல்லப்படுகிறது. கைலாசகிரியில் சற்று சுற்றினாற்போல் கற்களின் மீது ஏறிச் சென்றால் ஒரு சிறிய கோயில் உள்ளது. ஒரு கால் மடக்கி ஒரு காலூன்றியவாறு உள்ள ஒரு உருவம் அதில் உள்ளது. இதை ஒரு சிலர் நக்கீரர் என்கின்றனர். ஊர் மக்கள் தெலுங்கில் சித்தலையா (அதாவது சித்தி பெற்றவர்) என்றழைக் கின்றனர். நக்கீரர் இம் மலையில் வந்து தங்கி நதியில் நீராடி இறைவனைத் தொழுது வெப்பு நோயிலிருந்து முழுமையாக நீக்கம் பெற்ற வரலாறும், இத்தலத்தின் மீது கயிலைபாதி காளத்திபாதி நூலைப் பாடியுள்ளதும் நாம் அறிந்தவையே. எனினும் இவ்வுருவம் பற்றி ஏதும் நிச்சயிக்க முடியவில்லை. கோயிலிலிருந்து மலைக்குச் செல்லும் வழிக்கு நேராக உள்ள வீதியில் சென்றால் சற்றுத் தொலைவில் மிக அற்புதமான பஞ்சமுககேஸ்வரர் கோயிலையும், மலைக்கல்லில் அமைக்கப்பட்டுள்ள அருமையான புடை சிற்பங்களையும் தரிசித்து, கண்டு மகிழலாம். காளத்தி செல்வோர் இவற்றைத் தவறாது சென்று தரிசிக்க வேண்டும். சிவலிங்கத்தின் நாற்புறங்களிலும் அமைந்துள்ள முகங்களின் சிற்ப வேலைப்பாடு கண்டு தரிசிக்கத் தக்கது. மேற்புறம் சிவலிங்கமே |