பக்கத்தில் சிலந்தி, யானை, பாம்பு, கண்ணப்பர் முதலிய திருவுருவங்கள் உள்ளன. இதன் பக்கத்தில் மாடிப்படிகள் உள்ளன. மேலேறிச் சென்றால் கண்ணப்பரைத் தரிசிக்கலாம். எல்லோருக்ககும் இது அநுமதியில்லையாதலால் பூட்டப்பட்டுள்ளது. பிராகார வலத்தை முடித்துப் பழைய படியே தக்ஷிணாமூர்த்தியை வந்து தொழுது வெளியேறுகிறோம். வரும்போது இடப்பால் ‘மிருத்யுஞ்சலிங்க’ சந்நிதி உள்ளது. வெளியில் வலப்பால் தலமரம் மகிழ மரம் உள்ளது. காளியைத் தொழுதவாறே எதிரில் உள்ள கோபுரத்தைத் தாண்டி வெளியேறி, இடப்பக்கம் திரும்பி கைலாசகிரிக்குச் செல்லவேண்டும். இதை மக்கள் கண்ணப்பர் மலை என்றழைக்கின்றனர். ஏறிச் செல்ல நல்ல படிகள் உள்ளன. அதிக உயரமில்லை. மேலேறிச் சென்றால் சிறிய சிவலிங்கச் சந்நிதியைத் தரிசிக்கலாம். கண்ணப்பர் சந்நிதி உள்ளது. வில்லேந்தி நிற்கும் திருக்கோலம். மலைக்கிளுவை மரங்கள் இரண்டு சுவாமிக்கு முன்னால் மலையில் உள்ளன. இம்மலையிலிருந்து பார்த்தால் ஊரின் தோற்றம் நன்கு தெரிகிறது. அவ்வாறு பார்க்கும்போது நேரே தெரிவது துர்க்கை மலைக்கோயில், வலப்பால் தெரிவது முருகன் மலைக்கோயில். இம்மலை ‘கைலாசகிரி’ எனப்படுகிறது. கண்ணப்பர் திருவடி தோய்ந்த இடம். இம்மலை 25 கி.மீ. பரப்புடையது. இம்மலையில் காட்டில் பல இடங்களிலும் தீர்த்தங்களும், சிவலிங்கத் திருமேனிகள் உள்ள கோயில்களும், கண்ணப்பரின் திருவுருவங்களும் உள்ளன. மலைப்படிகளேறும் போதே திரும்பிப் பார்த்தால் 2 கி.மீ. தொலைவில் ‘பரத்வாஜதீர்த்தம்’ - குளம் நன்கு தெரியும். கரையில் அம்மகரிஷி தவம்புரிந்த கோயில் உள்ளது. சிவலிங்கத் திருமேனியும், பரத்வாஜ மகரிஷியின் திருவுருவமும் கோயிலில் உள்ளன. (இவ்விடத்தை லோபாய் தீர்த்தம் என்று வழங்குகின்றனர்.) இன்னும் சற்று தூரத்தில் மலையடிவாரத்தில் நீலகண்டேஸ்வரர் கோயில் உள்ளது. ஓரிடத்தில் மயூரி தீர்த்தமொன்றும் உள்ளது. 16 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு சோலையில் சஹஸ்ரராமலிங்கம் என்னும் கோயிலும் உள்ளது. இங்ஙனம் பெயருக்கேற்ப கைலாசகிரி பல கோயில்களையும் தீர்த்தங்களையும் பெற்றுத்திகழ்கிறது. பொங்கல் விழாவில் ஒரு நாளிலும் பெருவிழாவில் ஒரு நாளிலுமாக ஆண்டில் இருநாள்களில் சுவாமி இம்மலையை வலம் வருகிறார். அவ்வாறு வரும்போது மக்களும் மூவாயிரம் பேருக்குக் குறையாமல் உடன் செல்வார்களாம். இவ்வலம் காலை தொடங்கி |