இத்தலம் கிரகதோஷ நிவர்த்தித் தலமாதலால் இங்கு நவக்கிரகங்கள் இல்லை. சனிபகவான்மட்டும் உள்ளார். கனகதுர்க்கையம்மன் சந்நிதி உள்ளது. நடராச சபையில் இரண்டு திருமேனிகளும், இரண்டு சிவகாமித் திருமேனிகளும் உள்ளன. அறுபத்து மூவர் உற்சவத் திருமேனிகள் அழகுற உள்ளன. இத்திருக்கோயிலுடன் தொடர்புடைய திரௌபதியம்மன் கோயிலுக்குரிய பாண்டவர் திருமேனிகள், பாதுகாப்பாக இங்குக் கொண்டுவந்து வைக்கப் பட்டுள்ளன. கால பைரவர் சந்நிதி விசேஷமானது. சப்தமாதாக்கள் உள்ளனர். அம்பாள் - ஞானப்பூங்கோதையின் சந்நிதி கிழக்கு நோக்கியது. அழகான கருவறை, கோஷ்ட மூர்த்தங்கள் எவையுமில்லை. அம்பாள் நின்ற திருக்கோலம் - இரு திருக்கரங்கள். திருவடியில் ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ‘அர்த்தமேரு’ உள்ளது. அம்பாள் இடுப்பில் ஒட்டியாணத்தில் ‘கேது’ உருவமுள்ளது. எதிரில் சிம்மம் உளது. சந்நிதிக்கு வெளியில் பிராகாரத்தில் தலைக்கு மேற்புறத்தில் ராசிச் சக்கரம் வண்ணத்தில் எழுதப்பட்டுள்ளது. அம்பாளுக்கு வெள்ளிக்கிழமைதோறும் தங்கப்பாவாடை சார்த்தப்படுகிறது. சந்நிதிக்கு நேர் எதிரில் உள்ள மண்டபத்தில் வெள்ளிக்கிழமைதோறும் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது. அடுத்து வலமாக வரும்போது சித்திரகுப்தர், இயமன், தருமர், வியாசர் முதலியோர் பிரதிஷ்டை செய்ததாகப் பல சிவலிங்கங்கள் உள்ளன. எதிரில் சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. மூலவர் பாணம் மட்டும் ஒன்று மிக உயரமாக உள்ளது. முகலாயர் படையெடுப்பின் போது கோயிலில் உள்ள மூல விக்ரகங்களை உடைத்துச் செல்வங்களை அபகரித்து வந்தனர். அவ்வாறு இங்கு நிகழாதபடி தடுக்கவே மூலவருக்கு முன்னால் இதைப் பிரதிஷ்டை செய்துவைத்து அவ்விடத்தை மூடிவிட வந்தவர்கள் இதையே உண்மையான மூலவர் என்றெண்ணி, உடைத்துப்பார்த்து, ஒன்றும் கிடைக்காமையால் திரும்பிவிட, பின்பு சிலகாலம் கழித்து மூலவர் சந்நிதி திறக்கப்பட்டதாம். அப்போது முன் இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, படையெடுப்பாளர்களால் உடைக்கப்பட்ட பாணமே இது என்று சொல்லப்படுகிறது. இதற்குப் பக்கத்தில் அருமையான பெரிய ஸ்படிகலிங்கம் உள்ளது. இது ஸ்ரீ ஆதிசங்கரரின் பிரதிஷ்டை என்று சொல்லப்படுகிறது. |