பன்னீர் விட்டு அரைத்துத் தீர்த்தத்தில் கலந்து சங்கு ஒன்றில் வைத்துக் கொண்டு தரிசிப்போர்க்கு அத்தீர்த்தத்தையே தருகின்றனர். நாம் திருநீற்றுப் பொட்டலம் வாங்கித் தந்தால் அதை சுவாமி பாதத்தில் வைத்து எடுத்துத் தருகின்றனர். மூலவருக்குக் கங்கை நீரைத் தவிர வேறெதுவும் மேலே படக்கூடாது. பிற அபிஷேகங்கள் அனைத்தும் ஆவுடையாருக்கே செய்யப்படுகின்றன. சுவாமிக்கு மேலே தாராபாத்திரம் உள்ளது. கருவறை அகழியமைப்புடையது. கோஷ்ட மூர்த்திகளாக கணபதி, தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சர்ப்ப (பாம்பு) தோஷம் முதலியவை நீங்கும் தலமாதலின் இங்கு இராகு கால தரிசனம் இராகுகால சாந்திகள் செய்தல் முதலியன விசேஷமாகச் சொல்லப்படுகின்றது. இக் கோயிலில் உச்சிக்காலம் முடித்து நடைசார்த்தும் வழக்கமில்லை. காலை முதல் இரவு வரை திறந்தே இருக்கின்றது. நாடொறும் நான்கு கால பூஜைகள், பரத்வாஜ, மகரிஷி இங்குத் தவஞ்செய்து பேறு பெற்றாராதலின் அக்கோத்திரத்தைச் சேர்ந்தவர்களே இங்குப் பூஜைகளைச் செய்து வருகின்றார்கள். இத் தலத்தில் உள்ள மற்றுமொரு சிறப்பு : இங்கு அர்த்தசாமப் பூஜை கிடையாது. சாயரட்சை பூஜையுடன் முடிவு. இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாளை, பள்ளியறையில் அப்படியே எடுத்துக் கொண்டு போய்ச் சேர்ப்பித்து விடுவார்கள். மனநிறைவான தரிசனத்துடன் வெளியே வந்து பிராகார வலமாக வரும்போது வலப்பால் சஹஸ்ர லிங்க சந்நிதி உள்ளது. இடப்பால் படிகளேறிச் சென்று வள்ளி தெய்வயானை உடனாகிய சுப்பிரமணியரைத் தரிசிக்கலாம். எதிரில் உள்ள தூணில் ஐயப்ப சுவாமி ஒரு காலில் யோக பட்டத்துடன் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். காசி இராமேஸ்வர லிங்க மூர்த்தங்கள் உள்ளன. பக்கத்தில் வில் ஏந்திய கண்ணப்பர் திருவுருவம் கம்பீரமாகத் தரிசனம் தருகிறது. வரிசையாக வல்லபை கணபதி, லட்சுமி கணபதி சக்தி கணபதிகள் உள்ளனர். கிருஷ்ணதேவராயரும் அவருடைய மனைவி யாரும் பிரிதிஷ்டை செய்ததாக லிங்கங்கள் உள்ளன. இவ்வாறே அடுத்தடுத்து, பெரியதும் சிறியதுமாகவும், சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயர் சப்தரிஷிகள் முதலியோர்கள் பிரதிஷ்டை செய்ததாகவும் பல சிவலிங்கங்கள் உள்ளன. |