பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 95


     மூலவர், சுயம்பு தீண்டாத்திருமேனி. சிவலிங்கத் திருமேனி அற்புதமான
அமைப்புடையது. ஆவுடையார் பின்னால் கட்டப்பட்டது.

     சுவாமி   மீது தங்கக் கவசம் (பார்ப்பதற்கு பட்டைகளாகத் தெரிவது)
சார்த்தப்பட்டுள்ளது. இக்கவசத்தைச் சார்த்தும்போதும் எடுக்கும்போது கூட
சுவாமி மீது கரம் படக்கூடாது. இக்கவசத்தில் இருபத்தேழு நட்சத்திரங்களும்
பொறிக்கப்பட்டுள்ளன. இக்கவசத்தை எடுத்துப் பார்த்தால் இத்திருமேனியின்
அற்புதமான அமைப்பைத் தரிசிக்கலாம்.

     சிவலிங்கத் திருமேனி மிகவும் உயரமானது. இதன் அடிப்பாகத்தில்
சிலந்தி வடிவமும், மத்தியில் யானையின் இருதந்தங்களும், மேற்புறத்தில்
ஐந்து தலை பாம்பு வடிவமும் வலப்பால் கண்ணப்பர் கண் அப்பிய வடுவும்
அழகுற அமைந்துள்ளன. சிவலிங்கத்தின் மேற்புறம் ஐந்து தலை நாகம்
போலவே காட்சி தருகிறது. மேற்கு நோக்கிய சந்நிதி - சதுர ஆவுடையார்.

     காளத்தியானைக் கண்ணுளானாகக் கண்டு தொழ - எத்தனை நேரம்
தொழுதாலும் தெவிட்டாத தரிசனம். இச் சந்நிதியில் கிடைக்கும் சாந்திக்கு
ஈடேது !  விட்டுப்  பிரிய  மனமில்லை.  நமக்கே  இந்நிலை   என்றால்
கண்ணப்பர்க்கு வாய்த்தது எப்படியிருக்கும்?

     சந்நிதியில் மூலவர் பக்கத்தில்  மனோன்மணி  சத்தியின் திருமேனி
உள்ளது. கீழே ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரின் போக மூர்த்தத் திருமேனி உள்ளது.
சுகாசன அமைப்பில்   உள்ள இம் மூர்த்தம் மான மழு ஏந்தி அபயஹஸ்த,
சிம்மகர்ண முத்திரைகளுடன்  கூடிய  நான்கு  திருக்கரங்களுடன்  அழகுற
விளங்குகிறது. மூலவர் எதிரில் கதவருகில் உள்ள இரு தீபங்கள் எப்போதும்
அசைந்து கொண்டு ; வாயுத்தலம் இஃது  என்பதை  நிதர்சனமாகக் காட்டிக்
கொண்டிருப்பதைக் கண்டு தொழுவோம்.  சந்நிதியில்  சிலைக்கை   வேடர்
பெருமானாகிய கண்ணப்பரின் மூலத் திருமேனி உள்ளது. ‘கும்பிட்ட பயன்
காண்பார்போலச் சிலைக்கை  வேடர்  பெருமானைக்  கை    தொழுதார்’
ஞானசம்பந்தர் என்பதை எண்ணி நாமும் கண்ணப்பர் கழல் பணிகின்றோம்.

     மூலவருக்கு எதிரில் வெள்ளைக்கல் நந்தியும், பித்தளை நந்தியுமாக
இரு நந்திகள் உள்ளன.

     கண்ணப்பரால் அபிஷேகம் செய்யப்பெற்ற மூர்த்தியாதலின் இச்சந்தியில்
திருநீறு தரும் மரபில்லையாம் ; பச்சைக்கற்பூரத்தைப்