வட்டமாக குறித்துள்ள இடங்களில் நின்று பார்த்தால் கைலாச மலையையும் சுவாமி விமானத்தையும் தரிசிக்கலாம். அடுத்துள்ள தீர்த்தக் கிணறு ‘சரஸ்வதி தீர்த்தம்’ எனப்படுகிறது. இயற்கையில் பேசவராத குழந்தைகளுக்கு இத்தீர்த்தத்தைக் கொடுத்தால் நன்கு பேச வரும் என்ற நம்பிக்கை உள்ளது. அவ்வாறே எடுத்தும் தருகின்றனர். இடப்பால் ‘செங்கல்வராயன்’ (ஆறுமுகர்) சந்நிதி - வள்ளி தெய்வயானையுடன் காட்சி தருகிறார். அடுத்துள்ள உற்சவ அலங்கார மண்டபத்தில் காளத்தீஸ்வரர், ஞானப் பூங்கோதை, கண்ணப்பர், ஆறுமுகர், வள்ளி, தெய்வயானை, பரத்வாஜ மகரிஷி, பிட்சாடனார், அஸ்திரதேவர், விநாயகர், தொண்டைமான் அரசன், சிலந்தி, யானை, பாம்பு முதலிய உற்சவத் திருமேனிகள் உள்ளன. அடுத்துச் சென்றால் சுந்தர கணபதி, மோக்ஷ கணபதி, பால கணபதி ஆகிய மூவரின் தரிசனம். வலமாக வந்து மூலவரைத் தரிசிக்கச் செல்ல வேண்டும். வெண்பாக்கம் வழிபட்ட சம்பந்தர் காளத்தியை அடைந்து பாடிப் பரவினார். இங்கிருந்தவாறே கயிலாயம், கேதாரம், கோகர்ணம், திருப்பருப்பதம், இந்திரநீலப்பருப்பதம் முதலியவைகளைப் பாடித் தொழுதார். ஆலங்காடு பணிந்த அப்பர் காளத்தி வந்துதொழுது வடகயிலை நினைவுவர, கயிலைக்கோலம் காண எண்ணி யாத்திரையைத் தொடங்கினார். திருவல்லம் தொழுத சுந்தரர் காளத்தி வந்து இறைவனடி துதித்து, இங்கிருந்தவாறே திருப்பருப்பதம், திருக்கேதாரம் முதலிய தலங்களைப் பாடிப் போற்றினார். இறைவன் - ஸ்ரீ காளஹஸ்தீஸ்வர சுவாமி, காளத்திநாதர், குடுமித்தேவர் இறைவி - ஞானப்பிரசுன்னாம்பிகை, ஞானப் பூங்கோதை. தலமரம் - மகிழம். தீர்த்தம் - ஸ்வர்ணமுகி, பொன்முகலியாறு இத்தலம் மூவர் பாடல் பெற்றது. உள்நுழையும்போது கவசமிட்ட கொடிமரமும் முன்னால் பலிபீடமும் உள்ளன. எதிரில் சுவரில் சாளரம் உள்ளது. தூண்களில் அழகான சிற்பங்கள் உள்ளன. கடந்து சென்று காளத்தி நாதனைக் கண்ணாரக் கண்டு தரிசிக்க வேண்டும். |