எல்லாம் எரிந்து, அகல் விளக்கும் எரிந்து போகும். அப்போது அதை எடுத்து அரைத்து அக்கரியை (ரக்ஷையாக) சுவாமிக்குக் கறுப்புப் பொட்டாக இடுவார்கள். இது இங்கு விசேஷமானது. அடுத்துச் சென்றால் வலப்பால் உள்ள கோபுரம் ‘திருமஞ்சனக் கோபுரம்’ எனப்படும். இக்கோபுரத்திலிருந்து பார்த்தால் நேரே பொன்முகலி ஆறு தெரியும். ஆற்றுக்குச் செல்வதற்குப் படிக்கட்டுகள் அமைக்கப் பட்டுள்ளன. இவ்வழியேதான் திண்ணனார் (கண்ணப்பர்) பொன்முகலி நீரைக் கொண்டு வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தார் என்று சொல்லப்படுகிறது. இப்படிக்கட்டில் இறங்கும்போதே முதற்படியின் இடப்பால் தேவகோட்டை மெ.அரு.தா.இராமநாதன் செட்டியாரின் உருவச்சிலை உள்ளது. கி.பி.1912-ஆம் ஆண்டிலேயே ஒன்பது லட்சம் ரூபாய் செலவு செய்து இத்திருக்கோயிலில் திருப்பணிகளைச் செய்து மகா கும்பாபிஷேகத்தைச் செய்த பெரும் புண்ணியசாலி அவர். கைகூப்பி வணங்கத்தக்க இவர், கைகூப்பி வணக்கம் சொல்லும் அமைப்பிலேயே காட்சி தருகின்றார். சிவாலயத் திருப்பணிகளில் ‘நகரத்தார்’ பங்கு எஞ்ஞான்றும் நன்றிப் பெருக்கோடு நினைந்துப் போற்றப்பட வேண்டுவதாயிற்றே ! இக்கோபுரத்தின் எதிரில் நாற்கால் மண்டபத்தினையடுத்து ‘அஷ்டோத்ர லிங்க’ சந்நிதி உள்ளது. கோபுரத்தின் பக்கத்தில் ‘பஞ்சசந்தி விநாயகர்’ சந்நிதி. அடுத்துள்ள பெரிய மண்டபம் - நூற்றுக்கால் மண்டபம் கி.பி. 1516ல் கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்டதாகும். இதில் தற்போது வாகனங்கள் முதலியன வைக்கப்பட்டுள்ளன. எதிரில் உள்ள பதினாறுகால் மண்டபம் அச்சுதராயரால் கட்டப்பட்டதாகும். அவற்றைக் கடந்து சென்றால் ஆலய நுழைவு வாயில் எதிரில் இரு கொடிமரங்கள். ஒன்று கவசமிட்டது. மற்றொன்று கல்லால் ஆனது. 60 அடி உயரமுள்ள இது ஒரே கல்லால் ஆனது. பலிபீடமும் நந்தியும் உள்ளன. பிரதான கோபுரம் ‘தக்ஷிண கோபுரம்’ எனப்படும். 11-ஆம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழனின் ஆட்சியில் அவனுடைய நேரடி மேற்பார்வையில் அதற்கென நியமிக்கப்பட்ட கோயிற் குழுவினரால் இக்கோபுரம் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. தெற்கு நோக்கிய இக்கோபுர வாயிலில் நுழைந்தால் தமக்கு நேரே தக்ஷிணாமூர்த்தி தரிசனம். இடப்பால் மண்டபம் ; வலமாக அதிலேறி முதலில் ‘சங்கற்ப கணபதி’யைத் தரிசிக்கலாம். அடுத்து நால்வர் சந்நிதி. அடுத்து ஓரிரு பாதுகாப்பறைகள். வலமாக வரும் போது தரையில் |