பக்கம் எண் :

92 திருமுறைத்தலங்கள்


     என்றழைக்கப்படுகிறது.   இதுவும்   ஏனைய  கோபுரங்களும் 12ஆம்
நூற்றாண்டில் வீரநரசிம்ம யாதவராயரால் கட்டப்பட்டனவாகும்.

     இக்கோபுரத்தில்,  துவார கணபதியும், தண்டபாணியும் இடம் மாறிக்
காட்சி தருகின்றனர். வலப்பால் ஆலய அதிகாரியின் அலுவலகம் உள்ளது.
கோபுர வாயிலைக்   கடந்து உள்நுழைந்ததும், வலப்பால் வள்ளி தெய்வ
யானை உடனாகிய சுப்பிரமணியர் சந்நிதி தனிக்கோயிலாக -
சிறியதாகவுள்ளது.

     இத்தலம் அப்பிரதக்ஷண வலமுறையில் அமைந்துள்ளது. விநாயகர்
சந்நிதியும்,   பாலஞானாம்பாள்   சந்நிதியும்   உள்ளன.     அடுத்துப்
பஞ்சமுகேஸ்வரர்  சிவலிங்கம்  உள்ளது.  இடப்பால்  பழைய அம்பாள்
உருவம் நிறுத்தப்பட்டுள்ளது.

     இக்கோயிலில் ஆங்காங்குச் சிவலிங்கத் திருமேனிகள் பல உள்ளன.
அடுத்து வரும் வடக்குக் கோபுர வாயில் வழியாகத்தான் சுவாமி புறப்பாடு
நிகழுமாம். சற்றுமுன் சென்றால்  இடப்பால்  பாதாள  விநாயகர் சந்நிதி
உள்ளது. பெயருக்கேற்ப, விநாயகர் 35  அடி  ஆழத்தில்  உள்ளார். 20
படிகள் இறங்கிச்சென்று தரிசிக்கவேண்டும். விநாயகர் அமர்ந்துள்ள இடம்,
பொன்முகலியாற்றின் மட்டத்தில் உள்ளதாகச்  சொல்லப்படுகிறது.  இங்கு
வந்த அகத்தியர் விநாயகரை வழிபடாமற் போகவே, பொன்முகலி ஆறு
நீரின்றி வற்றியது. அகத்தியர் தம் தவறுணர்ந்து பாதாளத்தில் - ஆழத்தில்
விநாயகரைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு அருள் பெற்றார் என்பது தல
வரலாற்றுச் செய்தியாகும். எதிரில் சிவராத்திரி மண்டபம் உள்ளது. அடுத்து
மூலையில் 2 கால்களை வெளியே நிறுத்திச் சுவரோடு சேர்த்துக் கட்டப்பட்ட
சிறிய மண்டபம் வலப்பால் சுவரோரமாகவுள்ளது. கவனித்தால்தான் இது
தெரியும். பலபேர், ‘காளத்தி சென்று வந்தேன்’ என்று சொன்னால் இரண்டு
கால் ‘மண்டபம்’ பார்த்தாயா? என்று கேட்கும் வழக்கம் உள்ளது. அடுத்து
உள்ளிருக்கும் மூலவருக்கு நேராகச் சுவரில் சாளரம் அமைத்து அதற்கு
வெளியில் பிரதிட்டிக்கப்பட்டிருக்கும் நந்தியைக் காணலாம். இங்குத் தரையின்
மத்தியில் மண் நிரப்பப்பட்டுள்ள சதுரமான பகுதி உள்ளது. கார்த்திகைத்
தீபத்தன்று இங்குத்தான் ‘சொக்கப்பானை’ கொளுத்தப்படும். இம்மண்ணை
வாரிவிட்டால் பெரும்பள்ளமாகத் தோன்றும். அதில் நடுவில் பனைமரத்தை
நட்டுச் சுற்றிலும் சிறுசிறு கொம்புகளை நட்டு, அதைச் சுற்றிலும் ஓலைகளைச்
சுற்றுவார்கள். இடித்த எள்ளைப் பிசைந்து அகல்போலாக்கி அதில்
எண்ணெய், திரியிட்டு ஏற்றிப் பனை மரத்தின் உச்சியில் வைத்து,
சொக்கப்பானையைக் கொளுத்துவார்கள்.