கி.மீ. தொலைவிலும் உள்ள சிறந்த தலம் ; திருப்பதி ; ரேணிகுண்டா விலிருந்து அடிக்கடி பேருந்துகள் உள்ளன. சென்னையிலிருந்தும் காஞ்சியிலிருந்தும் பேருந்துகள் செல்கின்றன. பஞ்ச பூதத்தலங்களுள் இது வாயுத்தலம். தட்சிண (தென்) கயிலாயம் என்னும் சிறப்புடையது. சுவர்ணமுகி எனப்படும் பொன்முகலி ஆற்றின் கரையில் உள்ள தலம். இங்கு இவ்ஆறு வடக்கு முகமாகப் பாய்ந்து ஓடுவதால் உத்தரவாகினி - இவ்விடம் மிகச்சிறப்பாகச் சொல்லப்படுகிறது. அன்புக்குச் சான்றான கண்ணப்பர் தொண்டாற்றி வீடுபேறு பெற்ற விழுமிய தலம். ‘அட்டமாசித்திகள் அணைதரு காளத்தி’ எனச் சிறப்பிக்கப்படும் தலம். நக்கீரர் ‘கயிலை பாதி காளத்தி பாதி’ பாடியுள்ள பெருமை பெற்ற தலம். முசுகுந்தன், பரத்வாஜ மகரிஷி, சிவகோசரியார் முதலியோர் வழிபட்டுப் பேறுபெற்ற தலம். கண்ணப்பரின் பக்தியை வியந்து ஸ்ரீ ஆதிசங்கரர், தம் சிவானந்தலஹரியில் பாடியுள்ளதை அனைவரும் அறிவர். அருச்சுனன், தன் தீர்த்த யாத்திரையில் இங்கு வந்து இறைவனை வழிபட்டும், பரத்வாஜ மகரிஷியைக் கண்டு வணங்கிச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது. ஸ்ரீ - காளம் - அத்தி = சிலந்தி - பாம்பு - யானை - ஆகிய மூன்றும் வழிபட்டுப் பேறு பெற்ற சிறப்புடைய தலம். மலையடிவாரத்தில் உள்ள அருமையான திருக்கோயில். மலை, கைலாசகிரி என்று வழங்கப்படுகிறது. பொன்முகலியைக் கடந்து நெடிதுயர்ந்த மலையடிவாரத்தில் உள்ள காளத்தியை அடைந்தபோது நம் நெஞ்சில் கண்ணப்பருக்கு எழுந்து உணர்வு மேலிடுகிறது. இந்நிலப்பரப்பைத் தொண்டைமான் ஆண்டமையை நினைப்பூட்டும் வகையில், காளத்தி செல்லும் வழியில் ‘தொண்டைமான் நாடு’ என்னும் பெயரில் ஓரூர் உள்ளது. தற்போது தெலுங்குநாட்டில் உள்ள பகுதியாதலின், மக்கள் ‘தொண்டமநாடு’ என்று அதை வழங்குகின்றனர். இத்தலம் சிறந்த ‘ராகு, கேது க்ஷேத்ரம்’ என்றழைக்கப்படுகிறது. பேருந்தில் செல்லும்போது சுவர்ணமுகி பொன்முகலிப் பாலத்தைக் கடந்து ஊருள் செல்லவேண்டும். நகராட்சி அந்தஸ்தில் உள்ள சிறிய ஊர் - வட்டத்தலைநகர். ஊருள் மிக உயர்ந்து கம்பீரமாகக் காளிகோபுரம் (GALI KOPURAM) காட்சி தருகிறது. ஏழு நிலைகளுடன் பழமையாகத் திகழும் இக்கோபுரம் ஸ்ரீ கிருஷ்ண தேவாராயரால் கி.பி.1516-ல் கட்டப்பட்டது. இதைக்கடந்து செல்லும் நாம் அடுத்து, கோயிலின் பிரதான வாயிலை அடைகிறோம். இக்கோபுரம் ‘பிக்ஷசாலா கோபுரம்’ |