கொடிமரம், பலிபீடம், நந்தி உள்ளன. வலமாகவரும்போது சூரியன் சந்நிதி, அப்பர், சம்பந்தர், மாணிக்கவாசகர், சுந்தரர்சங்கிலியாருடன், உயரமான சஹஸ்ரலிங்கம், ஏகாம்பரர், இராமநாதர், ஜகந்நாதர், அமிர்தகண்டீஸ்வரர், யாகசாலை, குழந்தை ஈஸ்வரர், சுப்பிரமணியர், மதிற்சுவரை ஒட்டினாற்போல இருபத்தேழு நட்சத்திரங்களும் இப்பெருமானை வழிபட்ட ஐதீகத்தை விளக்கும் வகையில் வரிசையாக அமைக்கப்பட்டுள்ள நட்சத்திர சிவலிங்கங்கள் முதலிய சந்நிதிகள் உள்ளன. பக்கத்தில் காளி சந்நிதியும் உள்ளது. இதற்கு வலப்பால் கௌரீஸ்வரர் சந்நிதி உள்ளது. இச்சந்நிதியில் தட்சிணாமூர்த்தி யோகமுத்திரையுடன் காட்சி தருகின்றார். பக்கத்தில் ஆதிசங்கரர் உருவம் உள்ளது. அடுத்து வேப்பமர நிழலில் பெரிய லிங்கம் ஆவுடையாரின்றி உள்ளது. அடுத்து ஆகாசலிங்கம், அண்ணாமலையார், ஜம்புகேஸ்வரர், நாகலிங்கேஸ்வரர், காளத்தீஸ்வரர், மீனாட்சி சுந்தரேசுவரர் முதலிய சந்நிதிகள் (சிவலிங்கத் திருமேனிகளுடன்) உள்ளன. அதையடுத்து ‘ஒற்றியூர் ஈஸ்வரர்’ கோயில் அழகான முன் மண்டபத்துடன் உள்ளது. இப்பெருமானுக்குத்தான் நான்கு கால பூஜைகளும் நடைபெறுகின்றன. இம்முன்மண்டபத் தூண்கள் அற்புதமான சிற்பங்களை யுடையவை. ஒரு தூணில் பட்டினத்து அடிகளும் அதற்கு எதிர்த்தூணில் பர்த்ருஹரியாரும் உள்ளனர். இவற்றிற்கு இடையில் மேலேயுள்ள தூணில் - விதானத்தில் சூரியன் தலைப்புறமும் சந்திரன் காற்புறமும் அமைய மனிதனுடைய உடல் அமைக்கப்பட்டு, அவ்வுடலில் பஞ்சாட்சர விளக்கம் அமைத்துக் காட்டப்பட்டுள்ள (கல்சிற்பம்) அழகு கண்டுணரத் தக்கது. அழகான துவார பாலகர்கள். இச்சந்நிதி ஸ்ரீ ஆதிசங்கரரின் பிரதிஷ்டை என்று சொல்லப்படுகிறது. பைரவர் தனிக்கோயிலில் உள்ளார். (நடராசப் பெருமானின் பின்புறத்தின் சுவரில் வெளிப் பிராகாரத்தில் ஏகபாத மூர்த்தி உருவம் அழகாக உள்ளது. அடுத்துச் சுந்தரமூர்த்தியார் மண்டபம் உள்ளது. இதில் சுந்தரர், சங்கிலியாருடன் திருக்கல்யாண கோலத்தில் காட்சி தருகின்றார். இம் மண்டபத்தில் மக்கள் இன்றும் வந்து திருமணங்களை நடத்திச் செல்கின்றனர். வலம் முடிந்து நேரே சென்று தியாகராஜ சபா மண்டபம் அடையலாம். தியாகராஜர் சந்நிதி இங்கு விசேஷமானது. தரிசித்துப் பின்பு நுழைவு வாயிலில் சென்றால் நேரே எதிரில் நடராசர் காட்சி தருகின்றார். இடப்பால் வள்ளி தெய்வயானையுடன் சுப்பிரமணியர் |