பக்கம் எண் :

106 திருமுறைத்தலங்கள்


பெருமானின் பாடல்களும், திருமுறைப் பதிகங்களும் கோயிற்சுவரில் கல்லில்
பொறித்துப் பதிக்கப் பெற்றுள்ளன.

     அம்பாள் சந்நிதி. கோபுர வாயிலில் நுழைந்தவுடன் வலப்பால் உள்ளது.
தனிக்கோயில் -  தெற்கு   நோக்கியது.   அம்பாளும்   ஸ்ரீ  ஆதிசங்கரர்
பிரதிஷ்டையாகும். இந்த அம்பாள் மீது  வடலூர்   வள்ளற்    பெருமான்
பாடியதே ‘வடிவுடை மாணிக்கமாலை’யாகும்.  இப்பாடல்கள்  சலவைக்கல்லிற்
பொறித்துப் பதிக்கப்பட்டுள்ளன.

     பிராகாரத்தில்   பல்வேறு   அம்பிகைகளின்  வண்ணப்  படங்கள்
மாட்டப்பட்டுள்ளன.  கருவறையில்  கோஷ்ட  மூர்த்தங்கள் இல்லை. தல
புராணம் உள்ளது.  மாசியில்   பெருவிழா  நடைபெறுகிறது. வைகாசியில்
தியாகராஜ சுவாமி வசந்த உற்சவம் 15 நாள்கள், நடராசர் அபிஷேகங்கள்,
அன்னாபிஷேகம், நவராத்திரி, கந்தசஷ்டி, ஆருத்ரா, தைப்பூசம் முதலான
விழாக்கள்   அனைத்தும்  நடைபெறுகின்றன.  பட்டினத்தார், காளமேகம்,
அருணகிரிநாதர்,  தியாகய்யர், முத்துசுவாமி தீட்சிதர் ஆகியோர் சுவாமி,
அம்பாள்மீது பாடல்களை - கீர்த்தனைகளைப் பாடியுள்ளனர்.

     கோயிலை அடுத்துள்ள மார்க்கெட் பகுதியைக் கடந்து சிறிது தூரம்
சென்றால் எண்ணூர் நெடுஞ்சாலையில், சாலை ஓரத்தில் உள்ள பட்டினத்தார்
திருக்கோயிலை அடையலாம். பட்டினத்து அடிகள் முத்திப் பேறு பெற்ற
இடம்.

     (உயர்நீதிமன்றப் பகுதியிலிருந்து எண்ணூர் போகும் நகரப் பேருந்தில்
ஏறி, எண்ணூர் நெடுஞ்சாலையில் திருவொற்றியூர் மார்க்கெட் நிறுத்தத்தில்
(Stop) இறங்கினால் சாலை   ஓரத்தில் உள்ள இக்கோயிலை அடையலாம்).
பெயர் வளைவு உள்ளது. கடற்கரையையொட்டியுள்ள கிழக்கு நோக்கிய சிறிய
கோயில்.

     பட்டினத்தார் இங்குதான் சமாதியடைந்துள்ளார். கோயிலுள் சிவலிங்கத்
திருமேனியும் எதிரில் நந்தியும் உள்ளன. இத்திருமேனிக்கும் மற்றும் உள்ள
விநாயகர்,  சுப்பிரமணியர்,  நடராசர் முதலிய உற்சவத் திருமேனிகளுக்கும்
நாடொறும்   பூஜைகள்  முறையாக  நடைபெறுகின்றன.    “பட்டினத்துப்
பெருமானுக்குப்   பேய்க்   கரும்பு இனித்த இடம் இஃது ஆகும். ஆதலின்
தனக்குரிய  இடம்  இதுவேயென்று  முடிவுசெய்து  கடற்கரையையொட்டிய
இவ்விடத்தில் சமாதியானார் என்பது வரலாறு.”


     இங்கு ஆடித்திங்கள் உத்திராட நட்சத்திரத்தில் (பட்டினத்தார்) குருபூஜை
நடைபெறுகின்றது.