பக்கம் எண் :

108 திருமுறைத்தலங்கள்


21. திருவலிதாயம்

சென்னை - பாடி

     தொண்டை நாட்டுத் தலம்.
 
     தற்போது சென்னைக்கு அருகில் உள்ள ‘பாடி’ என்னும் இடமே
‘திருவலிதாயம்’ என்னும் தலம் ஆகும்.

     சென்னை   ஆவடிச்சாலையில் ‘பாடி’   உள்ளது.     இப்பகுதி
தொழிற்சாலைகள் நிரம்பிய பகுதியாகும். ‘டி.வி.எஸ். லூகாஸ்’ நிறுத்தத்தில்
(Stopல்) இறங்கி, எதிரில் போகும் பாதையில் உள்ளே   சென்றால் ஊர்
நடுவே கோயில் உள்ளது.   கோயில்   புதுப்பொலிவுடன்  திகழ்கின்றது.
கஜப்பிரஷ்ட விமான அமைப்புடைய அழகான கோயில்.

     பரத்வாஜர், இராமர், ஆஞ்சநேயர், சூரியன்,   சந்திரன்,  இந்திரன்,
வலியன் (கருங்குருவி) முதலானோர் இறைவனை வழிபட்டுப் பேறு பெற்ற
தலம். இத்தலத்தில்  பௌர்ணமி   விசேஷமாகச்    சொல்லப்படுகின்றது.
இராமலிங்க சுவாமிகளின் அருட்பாவிலும் இத்தலம்   இடம்  பெற்றுள்ளது.
பரத்வாஜ முனிவர், வலியனாக (கருங்குருவியாக) சாபம் பெற்றார். அச்சாபம்
நீங்க இத்தலத்துக்கு வந்து தீர்த்தம் உண்டாக்கி,  இறைவனைப்   பூசித்துச்
சாபம் நீங்கப் பெற்றார் என்பது தலவரலாறு. பிரம்மாவுக்குக் கமலை, வல்லி
என இரு பெண்கள் தோன்றினர் என்றும் அவர்களை  விநாயகர்  மணந்து
கொண்டார் என்றும் வரலாறு ஒன்று சொல்லப்படுகின்றது.

     இறைவன் - வல்லீஸ்வரர், வலிதாயநாதர்
     இறைவி - ஜகதாம்பாள், தாயம்மை
     தலமரம் - பாதிரி
     தீர்த்தம் - பரத்வாஜ தீர்த்தம்

     சம்பந்தர் பாடல் பெற்றது. அருணகிரிநாதர் திருப்புகழ்ப் பாடலும்
உள்ளது.

     மூன்று  நிலைகளுடன்  கூடிய  ராஜகோபுரம்.  நுழைந்ததும்  நேரே
கொடிக்கம்பமும் சந்நிதியும் தெரிகின்றது. விசாலமான உள்  இடம். வெளிப்
பிராகாரத்தில் சந்நிதி ஏதுமில்லை. ராஜகோபுரத்துள் நுழைந்ததும் வலப்பால்
மூலையில் (வெளிப்பிராகார மூலையில்) நவக்கிரக சந்நிதி உள்ளது. நவக்கிரக
சந்நிதிக்கு எதிரில் தீர்த்தக்கிணறு உள்ளது.