திருஞானசம்பந்தர் பாடல் பெற்றது. வாயிலார் நாயனார் அவதரித்த தலம். தெய்வப்புலவர் திருவள்ளுவர் மயிலையில் பிறந்ததாக வரலாறு. திருஞானசம்பந்தர், எலும்பைப் பெண்ணாக்கிய (பூம்பாவை) அற்புதத்தை நிகழ்த்திய அருமையுடைய தலம். கோயிலுக்கு முன்பு அழகான, பரந்த திருக்குளம் - தெப்பக்குளம் சுற்றிலும் நாற்புறமும், நன்கமைக்கப்பட்டுள்ள படிகளுடனும் ; நடுவில் நீராழி மண்டபத்துடனும் காட்சி தருகின்றது. கோயிலை நோக்கிச் செல்லும் நம்மை வரவேற்கும் ராஜகோபுரம் மிக்க அழகுடையது ; மேற்கு நோக்கியுள்ளது. உள்ளே நுழைந்தால் நேர் எதிரே சுவாமி - அ/மி.கபாலீஸ்வரர் சந்நிதி - மேற்கு நோக்கியுள்ளது. எடுப்பான சிவலிங்கத் திருமேனி. சுவரில் தலப்பதிகமான ‘மட்டிட்ட புன்னை’ என்னும் பதிகம் கல்லில் பொறிக்கப்பட்டுப் பதிக்கப்பட்டுள்ளது. சுவாமி சந்நிதியுள் நுழைந்து வலமாக வரும்போது நடராசப் பெருமான் திருமேனி நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. உருத்திராக்கப் பந்தலில் பெருமான் காட்சி தருகின்றார். உலகெலாம் மலர்சிலம்படியைத் தொழுது நகர்ந்து வள்ளி தெய்வயானையுடன் காட்சி தரும் முருகப் பெருமானைத் தரிசித்து வலம் வரும்போது, சோமாஸ்கந்தர், பிட்சாடனர் முதலான உற்சவத் திருமேனிகளைத் தொழுது வணங்கலாம். கோஷ்ட மூர்த்தங்களாகத் துர்க்கை, தட்சிணாமூர்த்தி, விநாயகர் காட்சி தருகின்றனர். அறுபத்துமூவருடைய உற்சவ மேனிகளும் அடுத்துள்ள மூலத்திருமேனிகளும் கண்ணுக்குப் பெரு விருந்தாகும். கால நிலைக்கேற்ப பல்வேறு சுவாமிகளின் வண்ணப் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. வலமாக வந்து கபாலீச்சரக் கண்மணிையைக் கண்ணாரத் தொழுது வெளியே வந்து வலப்பால் சென்றால் அம்பாள் சந்நிதியைக் காணலாம். அ/மி. கற்பகாம்பாளின் அருள்வெளி - உள்ளே நுழையும்போதே தெய்வீக மணம். நேரே நின்று, நின்ற கோலத்தில் காட்சி தரும் கற்பகவல்லியைத் தரிசிக்கலாம். உள்ளே வலம் வரும் போது சுவரில் மாட்டப்பட்டிருக்கும் பல தலங்களில் வீற்றிருக்கும் அம்பாளின் வண்ணப் படங்களையும் கண்டு கை தொழலாம். வெளியே வந்து வலப்புறம் திரும்பி வெளிப் பிராகாரத்தில் வரும் நமக்கு கிழக்கு நோக்கி அமைந்துள்ள பூம்பாவை சந்நிதி முதல் தரிசனம் தருகின்றது. விமானத்தின் மேலே எலும்பைப் பெண்ணாக்கிய அற்புதம் சுதையில் செய்யப்பட்டுள்ளது. கண்டு தொழுது வலம் வரும்போது அலுவலக அறையையொட்டி புன்னைமரம் - தலமரம் |