காட்சி தருகிறது. மயிலாய் அம்பிகை பூசித்த வரலாறு உள்ளது. புன்னைவனநாதர் சந்நிதி - சிவலிங்கத் திருமேனி உள்ளது. அம்பாள் மயில் வடிவில் பூசித்ததால் மயில் உருவமும் சிலா ரூபத்திலுள்ளது. பக்கத்தில் உள்ள கூண்டில் இரு மயில்கள் தேவஸ்தானப் பராமரிப்பில் வளர்கின்றன. அழகான விமானத்துடன் அமைந்துள்ள சனிபகவான் சந்நிதியை வலமாக வந்து நவக்கிரகங்களைத் தொழுது சுந்தரேஸ்வரர் ஜகதீஸ்வரர் சிவலிங்கத் திருமேனிகளைத் தரிசிக்கலாம். அடுத்து நர்த்தன விநாயகர், அண்ணாமலையார் சந்நிதிகள். சிங்காரவேலர் சந்நிதி சிறப்பானது. சிறிய நந்தவனம் உள்ளது. தண்டாயுதபாணி சந்நிதியும், வாயிலார் நாயனார் சந்நிதியும் எதிர்ப்புறத்தில் அமைந்துள்ளன. தேவஸ்தானத்தில் நூலகம் உள்ளது. பதினாறுகால் (அலங்கார) மண்டபமும், நான்கு கால் (சுவாமி எழுந்தருளும்) மண்டபமும் உள்ளன. அருணகிரிநாதரைத் தொழுது, அடுத்து அமைந்துள்ள மயிலைத் திருப்புகழ்க் கல்வெட்டை ஒரு முறை ஊன்றிப் படித்துப் பின்னர் கொடிக் கம்பத்தின் முன்பு வீழ்ந்து வணங்கி, அமரும்போது நெஞ்சில் எழும் நிறைவுக்கு ஈடேது ! கற்பகவல்லியின் பொற்பதமே நமக்கு நற்கதி தரவல்லது. ஆம் ! அவளே நமக்கு விழுத்துணை. இத்திருக்கோயிலில் நடைபெறும் பங்குனி உத்திரப் பெருவிழா மிக்க சிறப்புடையது. இவ்விழாவில் அறுபத்துமூவர் திருவிழா கண்கொள்ளாக் காட்சியாகும். பிரதோஷம், கிருத்திகை, ஆடிப்பூரம், ஆவணிமூலம், நவராத்திரி, சஷ்டி, திருமுறை விழா முதலியனவும் மார்கழி (தனுர்) மாத வழிபாடுகளும் இக்கோயிலில் சிறப்புடையவை. இத்திருக்கோயில் 300 ஆண்டுகள் பழமையானது. இதற்கு முன்னிருந்த பழைய கோயில் கடற்கரையில் இருந்தது. அது வெள்ளையர்களால் இடிக்கப்பட்டது. ‘ H. D. லோவ்’ என்பவர் எழுதியுள்ள சென்னை சரித்திர நூலில் கி.பி. 1672ல் துருக்கியரோடு நடந்த போரின்போது பிரெஞ்சு சேனைகள் தற்போதுள்ள இக்கோயில் பிராகாரத்தில் ஒளிந்துகொண்டிருந்ததாகக் குறித்துள்ளார். கி.பி. 1798ல் வெளியிடப்பட்டுள்ள நகரப்படத்தில் இக்கோயில் திருக்குளம் காட்டப்பட்டுள்ளது. கடற்கரையில் கோயில் இருந்த இடத்தில் அதை இடித்து வெள்ளையர்கள் கட்டிய வழிபாட்டு இடமே இப்போதுள்ள “சாந்தோம் கதீட்ரல் மாதாகோயில்” உள்ள இடமாகும். தேவாரத்தில் இத்தலம் ‘மயிலாப்பு’ என்று குறிக்கப்படுகிறது. (ஒற்றியூர்-திருத்தாண்-6) அருணகிரிநாதரும் “கடலக்கரை திரையருகே சூழ் மயிலைப் பதி உறைவோனே” என்று பாடுகிறார். |