பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 121


25. திருவான்மியூர்

சென்னை

    தொண்டை நாட்டுத் தலம்.

    சென்னைப் பெருநகரின் தென் கடைசிப் பகுதி.   சென்னை  உயர்நீதி
மன்றப் பகுதியிலிருந்து   திருவான்மியூருக்கு   நகரப்பேருந்து  செல்கிறது.
திருவான்மியூர்ப் பேருந்து நிலையத்தில்   இறங்கிப்  பக்கத்தில்     உள்ள
இக்கோயிலை அடையலாம். சென்னையிலிருந்து கடற்கரைச் சாலை வழியாக
மாமல்லபுரம் செல்லும் பேருந்துச் சாலையில் (திருவான்மியூரில்) இக்கோயில்
உள்ளது. கிழக்குக் கோபுரமே பிரதான வாயில். கிழக்கு, மேற்குக் கோபுரங்கள்
புதுப்பிக்கப்பட்டுப் பொலிவுடன்   விளங்குகின்றன.   அழகிய    சுற்றுமதில்.
வான்மீகி முனிவருக்கு இறைவன் நடனக்   காட்சியருளிய  தலம். காமதேனு
பால் சொரிந்து வழிபட்ட சிறப்புடையது.   கோயிலில்  வான்மீகி   முனிவர்
திருமேனி உள்ளது. மேலைக்கோபுர வாயிலுள்ள சாலைவழியே சிறிது தூரம்
சென்றால் வான்மீகிநாதர் கோயில் உள்ளது.

     சிறந்த மேதையாக விளங்கிய அப்பைய தீக்ஷிதர் சென்னைக்கு அருகில்
உள்ள வேளச்சேரியில்  வாழ்ந்து வந்தபோது நாடொறும் வான்மியூர் வந்து
பெருமானை வழிபட்டு  வந்தார்.   ஒருமுறை  இறைவனருளால்  இப்பகுதி
முழுவதும் நீர்ப்பிரளயமாக மாற   அப்பையர்   பிரார்த்தித்தார்.   அவர்
பிரார்த்தனையை ஏற்று அவருக்காக இறைவன் மேற்கு நோக்கித் திரும்பிக்
காட்சியளித்தார். இச்சிறப்பினால்    சுவாமி சந்நிதி மேற்கு நோக்கியுள்ளது.
அகத்தியருக்கு, (வைத்திய) மூலிகைகளைப் பற்றி இறைவன் உபதேசித்தருளிய
சிறப்புத் தலம். இதனால் இறைவனுக்கு  ஒளஷதீஸ்வரர் - மருந்தீசர் என்று
பெயர். வேதங்கள்   வழிபட்ட   தலம்.  தேவர்களும், சூரியனும் பிருங்கி
முதலியோரும் வழிபட்டு இத்தலத்தில் பேறு பெற்றுள்ளனர்.

     இறைவன் - ஒளஷதீஸ்வரர், மருந்தீசர், பால்வண்ணநாதர்,
               வேதபுரீஸ்வரர்.
     இறைவி - திரிபுரசுந்தரி, சொக்கநாயகி, சுந்தரநாயகி.

     தீர்த்தம் - பஞ்ச தீர்த்தங்கள் - இவையில்லை.   கோயிலுக்கு  எதிரில்
இடப்பால் ஒரு தீர்த்தக்குளம் உள்ளது. அண்மையில் வலப்பால் உள்ள குளம்
பயனற்றுள்ளது.

     தலமரம் - வன்னி