பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 127


வணங்கி, வாயிலுள் சென்றால் முன்மண்டபம். நேரே அம்பாள் தரிசனம்.
தெற்கு நோக்கிய சந்நிதி. அம்பாள் நின்ற திருக்கோலம். அபயவரதத்துடன்
கூடிய நான்கு திருக்கரங்கள். எதிரில் சிம்மம் உளது. அம்பாள் கோயில்
தனிக்கோயிலாக வுள்ளது - வலம் வரும் வசதியுள்ளது.

     இடப்பால் சுவாமி சந்நிதிக்குச் செல்லும் வழியுள்ளது. நுழைவு
வாயிலைக் கடந்து பிராகாரத்தை வலமாக வரும்போது சூரியன், விநாயகர்,
பல சிவலிங்கத் திருமேனிகள்; நாகலிங்கங்கள், வள்ளி தெய்வயானை,
சுப்பிரமணியர், நடராசர், நால்வர் ஆகிய சந்நிதிகள் உள்ளன.
வணங்கியவாறே, பக்கவாயில் வழியாக உட்சென்றால் மூலவர்
காட்சியளிக்கின்றார்; எதிரில் சாளரம் உள்ளது.

     மூலமூர்த்தி சிவலிங்கத் திருமேனி - சுயம்பு. சிறிய பாணம். சுவாமி
கருவறை அகழி அமைப்புடையது. கோஷ்டமூர்த்தங்களாக விநாயகர்,
தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகிய மூர்த்தங்கள்
உள்ளன. இக்கோயிலில் சித்திரையில் நடைபெறும் பெருவிழா அனைத்தும்
தியாகராஜாவுக்குத்தான். இத்திருவிழாவில் 9-ஆம் நாளன்று, இறைவன்
சனகாதி முனிவர்களுக்கு அருளிய சின்முத்திரை உபதேச ஐதீகம்
நடைபெறுகின்றது. ‘முதுவாயோரி’ தலப்பதிகம்- சுந்தரர் பாடியது கல்லிற்
பொறித்துப் பதிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலுக்கு எதிரில் ஆறுமுகச்
செட்டியார் சத்திரம் உள்ளது. ஆலயத்திற்கு வரும் யாத்திரிகர்கள் அமர்ந்து
உண்ண, இளைப்பாற இடமளித்து உதவுகின்றனர்.

     மலையடிவாரத்தில் மருந்தீசர் கோயில் உள்ளது. ராஜ கோபுரமில்லை.
தெற்கு நோக்கிய வாயில். உட்சென்றதும் சிறிய மண்டபம் உள்ளது.
இம்மண்டபத் தூண்களில் துவாரபாலகர் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
இவை தவிர, இலிங்கோற்பவர், மாவடிசேவை, பட்டினத்தார், வள்ளலார்,
விநாயகர், தண்டபாணி, அப்பர், சம்பந்தர், சுந்தரர் முதலிய சிற்பங்கள்
உள்ளன. இவற்றுள் சுந்தரரை நோக்கியவாறு, கையில் அமுதுடன் காட்சிதரும்
இறைவனின் சிற்பம் உள்ளது - கண்டு மகிழத்தக்கது. சுற்றுமதில் உள்ளது.
சிறிய கோயில் - சுற்றிலும் இயற்கைச் சூழல், அமைதியான இடம்.
உள்பிராகாரத்தில் விநாயகர் கோயில் உள்ளது. சுவாமி சந்நிதி மேற்கு
நோக்கியது. எதிரில் சாளரம் உள்ளது. இதன் வெளியே கொடிமரம் நந்தி
பலிபீடங்கள் உள. படிகளில் இறங்கி நீர் அருந்தும் அமைப்புடைய
‘நடைபாதைக் கிணறு’ உள்ளது. பக்கத்தில் நவக்கிரக சந்நிதி.