அம்பாள் சந்நிதி மேற்கு நோக்கியது. நின்ற திருக்கோலம். அபய வரதத்துடன் கூடிய நான்கு திருக்கரங்கள். எதிரே நாகலிங்கமரம் உள்ளது. துவாரகணபதி, சுப்பிரமணியரை வணங்கியுட் சென்றால் மூலவர் தரிசனம், உயர்ந்த திருமேனி - கோமுகம் மாறியுள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாக ; விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா மூர்த்தங்கள் உள்ளன. கோஷ்ட பிரம்மாவுக்கு எதிரே சண்டேசுவரர் நான்கு முகங்களுடன் சதுர்முக சண்டேசுவரராகக் காட்சி தருகின்றார். இந்த அமைப்பு இக்கோயிலில் உள்ள ஓர் அரிய உருவ அமைப்பாகும். பைரவர் சந்நிதி உள்ளது. மாசி மாதத்தில் இக்கோயிலில் திருவிழா நடைபெறுகின்றது. இத் திருவிழாவில் 9-ஆம் நாளில் - இறைவன் பிச்சையெடுத்துச் சுந்தரருக்கு அமுதிட்ட ஐதீகம் நடைபெறுகிறது. இரந்திட்டஈஸ்வரர் வீற்றிருக்கும் சிறிய கோயில் மேற்கில் உள்ளது. சித்திரையில் பெருவிழா நடைபெறுகிறது. “மேலைவிதியே வினையின் பயனே விரவார் புரமூன்றெரிசெய்தாய் காலையெழுந்து தொழுவார் தங்கள் கவலை களைவாய் கறைக்கண்டா மாலைமதியே மலைமேல் மருந்தே மறவேன் அடியேன் வயல்சூழ்ந்த ஆலைக்கழனிப் பழனக்கச்சூர் ஆலக்கோயில் அம்மானே.” (சுந்தரர்) -“தூவிமயில் ஆடும் பொழிற்கச்சூர் ஆலக் கோயிற்குள் அன்பர் நீடும்கனதூய நேயமே” (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. மருந்தீஸ்வரர் திருக்கோயில் திருக்கச்சூர் & அஞ்சல் (வழி) சிங்கப்பெருமாள் கோயில் S.O. 603 204. செங்கற்பட்டு வட்டம் - காஞ்சிபுரம் மாவட்டம். |