27. திருஇடைச்சுரம் திருவடிசூலம் | தொண்டை நாட்டுத் தலம். மக்கள் வழக்கில் ‘திருவடி சூலம்’ என்று வழங்குகிறது. செங்கற்பட்டு - திருப்போரூர் பேருந்துப்பாதையில் இத்தலம் உள்ளது. செங்கற்பட்டு ரயில் நிலையத்திலிருந்து திருப்போரூர் செல்லும் பேருந்தில் ஏறி, ‘திருவடிசூலம்’ சாலை நிறுத்தத்தில் இறங்கி 1 கி.மீ. உள்ளே சென்றால் ஊரை அடையலாம். (செங்கற்பட்டு - திருக்கழுக்குன்றம் பாதையில் சென்றால் இடப்புறமாகத் திரு்போரூர் செல்லும் பாதை பிரிகிறது. இப்பிரிவுப் பாதையில் திருப்போரூர் நோக்கி 3 கி.மீ. சென்றால் ‘திருவடி சூலம்’ நிறுத்தம் வரும். சாலையோரத்தில் கோயில் பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது. கார், தனிப்பேருந்து முதலியன கோயில்வரை செல்லும். ஊர்க்கோடியில் கோயில் உள்ளது. பழமையான கோயில். மலைகள் சூழ்ந்த இயற்கைச் சூழலில், வயல்களை ஒட்டினாற்போல் கோயில் அமைந்துள்ளது. இறைவன் - ஞானபுரீஸ்வரர், இடைச்சுரநாதர். இறைவி - கோபரத்னாம்பிகை, இமயமடக்கொடி. சம்பந்தர் பாடல் பெற்ற தலம். கௌதமரிஷியும், சனற்குமாரரும் வழிபட்ட தலம். அம்பாள், பசு வடிவில் வந்து பால்சொரிந்து வழிபட்ட தலம். ஊர், சிறிய கிராமம். பழைமையான, கருங்கல் கட்டமைப்புடைய திருக்கோயில். இராஜ கோபுரமில்லை. கட்டுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டு அதற்காகத் திருப்பணி உண்டியல் கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. முகப்பு வாயிலுக்கு முன்னால் இடப்பால் வரசித்தி விநாயகர் சந்நிதி உள்ளது. வலப்பால் குளம் உள்ளது - படித்துறைகள் செம்மையாக இல்லை. (தாமரைக் குளம்). முகப்பு வாயில் தெற்கு நோக்கியது. வாயிலில் நுழைந்து விநாயகரைத் தொழுது, வலமாகப் பிராகாரம் சுற்றி வந்தால் பிரம்மாண்டேஸ்வரர் சந்நிதியும் அதையடுத்து பிரம்மாண்டேஸ்வரி சந்நிதியும் தனித்தனியே உள்ளன. கொடிமரம் இல்லை. பலிபீடம், நந்தி மட்டுமே உள்ளன. பக்கத்தில் வில்வமரம் உளது. உள் (முகப்பு) வாயிலில் நுழைந்து, மண்டபம் தாண்டி, வலமாகச் சுற்றி வந்தால் நால்வர் பிரதிஷ்டை தலம்-9 |