இறைவி - இளங்கிளியம்மை, சுந்தரநாயகி, பாலசுகாம்பிகை, அதிசுந்தரமின்னாள். தலமரம் - சரக்கொன்றை. தீர்த்தம் - (1) சங்கு தீர்த்தம் (பேருந்து நிற்குமிடத்தில் உள்ளது. பயன்படும் நிலையிலில்லை.) (2) சிம்ம தீர்த்தம் (கோயிலில் பிராகாரத்தில் தலமரத்தினடியில் உள்ளது.) சம்பந்தர் பாடல் பெற்றது. முன்பொருமுறை இவ்வூர் வழியே சென்ற பாண்டிய மன்னன் ஒருவன் காட்டு முல்லைக் கொடிகள் சூழ்ந்த காட்டைக் கண்டான். பொன்நிறமான உடும்பு ஒன்று ஓடுவது கண்டு அவன் துரத்திச் செல்ல அது ஓடிச்சென்று சரக்கொன்றை மரத்தின் பொந்தில் புகுந்து கொண்டது. அரசன் ஆணைப்படி ஏவலர்கள் அம்மரத்தை வெட்ட, குருதி வெளிப்பட, தோண்டுகையில் சிவலிங்கம் வெளிப்பட்டது. வெட்டிய தழும்புபட்ட இறைவனுக்கு, அரசன் “திரிநேத்திரதாரி” என்னும் முனிவரிடம் செல்வத்தைத் தந்து கோயில் கட்டச் செய்தான். அவரும், தன்னையும், மன்னனையும் ஆட்கொண்ட இறைவனுக்கு, இரு கருவறைகள் கொண்ட இக்கோயிலைக் கட்டினார். கோயிலைக் கண்ட மன்னன் இரு சந்நிதிகள் அமைந்திருப்பது கண்டு முனிவரைக் கேட்க, அவர், அரசே ! உம்மை ஆட்கொண்டவர் “உமையாட்சீஸ்வரர்” ;எமையாட் கொண்டவர் “ஆட்சீஸ்வரர்” என்று மறுமொழி தந்ததாக வரலாறு கூறுகின்றது. உமையாட்சீஸ்வரர் சந்நிதி, வாயிலுக்கு நேரே உள் அடங்கி, பிராகாரத்தில் உள்ளது. வாயிலுக்குச் சற்றுத் தள்ளி முன்னால் இருக்கும் மூலவர் சந்நிதி ஆட்சீஸ்வரர். இறைவன், “திரிநேத்திரதாரி” முனிவருக்குக் காட்சி தந்த நினைவாக இன்றும் பெருவிழாவில் ஏழாம் நாள் மாலை கொன்றையடி சேவை விழா நடைபெறுகின்றது. கௌதமர், கண்வர் முதலியோர் வழிபட்ட தலம். பழமையான கோயில், ராஜகோபுரம் கிழக்கு நோக்கி ஐந்து நிலைகளுடன் காட்சியளிக்கிறது. கோயிலுக்கு எதிரில் ‘வள்ளுவ மண்டபம்’ என்றழைக்கப்படும் மண்டபமொன்றுள்ளது. அதில் விநாயகர் உள்ளார். ராஜகோபுர வாயிலில் நுழையும்போதே வலப்புறத் தூணில் நரசிம்ம அவதாரச் சிற்பமுள்ளது. உள்ளே நுழைந்ததும் வலப்பால் |