பக்கம் எண் :

138 திருமுறைத்தலங்கள்


அம்பாள் சந்நிதி உள்ளது. பக்கத்தில் நவக்கிரக சந்நிதி, செப்புக் கவசமிட்ட
கொடிமரம், பலிபீடம், நந்தி உள்ளன. வெளிப்பிராகாரத்தில் தலமரமாகிய
சரக்கொன்றை உள்ளது. இம்மரத்தினடியில் சிவலிங்கம், அம்பாள், எதிரில்
நந்தி, பக்கவாட்டில் நின்று கைகுவித்து வணங்கும் நிலையில் திரிநேத்திரதாரி
முனிவரின் உருவம் முதலியவை உள்ளன. அடுத்துள்ளது யாகசாலை,
உள்வாயிலைக் கடந்து செல்லும் போது, துவார விநாயகரும், சுப்பிரமணியரும்
கல்லில் பொறிக்கப்பட்டுள்ளனர். உள்பிராகாரத்தில் நால்வர் பிரதிஷ்டையும்,
சித்திபுத்தி விநாயகர், பரவையார், சுந்தரர், சங்கிலியார் சந்நிதியும் தொடர்ந்து
அறுபத்துமூவர் சிலாரூபங்களும் உள்ளன. அடுத்து வலம் வரும்போது
தாயார் சந்நிதியும், சீனிவாசப் பெருமாள் சந்நிதியும் உள்ளன. அடுத்து
உமையாட்சீஸ்வரர் சந்நிதி உள்ளது. துவார கணபதியை வணங்கி, உட்சென்று
இறைவனைத் தரிசிக்கலாம்.

     உள்பிராகாரத்தில் சரஸ்வதி, லட்சுமி, சப்தமாதர்கள், அடுத்து ஒரு
காலில் யோகப்பட்டத்துடன் காட்சி தரும் ஐயப்பன் ஆகியோர் சந்நிதிகள்
உள்ளன. வலப்பால் அம்பாள், உமையாட்சீஸ்வரர் சிவலிங்கத் திருமேனி,
தரிசித்து வெளியே வந்து, பிராகார வலம் வரும்போது பழனியாண்டவர்
சந்நிதியும் அடுத்து வள்ளி தெய்வயானை உடனாகிய ஆறுமுகர் சந்நிதியும்
அழகாக உள்ளன. அறுபத்துமூவர் உற்சவத் திருமேனிகள் விசை கண்ணுக்கு
நிறைவான காட்சி. நடராச சபையும் அடுத்து பிரமகபால மாலையுடன் கூடிய
பைரவர் சந்நிதியும் உள்ளன. பக்கத்தில் சூரியக் கடவுள். நேரே மூலவர் -
ஆட்சீஸ்வரர் சந்நிதி உள்ளது. துவார கணபதியை வணங்கி உட்செல்ல
வேண்டும். துவாரகணபதிக்கு மேற்புறம் ஜம்புகேஸ்வரச் சிற்பமும்,
பசுபதீஸ்வரச் சிற்பமும் உள்ளன. மறுபுறத்தில் சண்டேசுவரர், தாதைதாளை
அறவீசும் காட்சி சிற்ப வடிவிலுள்ளது. இருபுறமும் துவாரபாலகர்கள். உள்ளே
பிட்சாடனர், நால்வர், விநாயகர், சந்திரசேகர், சோமாஸ்கந்தர் முதலிய
உற்சவத் திருமேனிகள் வைக்கப்பட்டுள்ளன.

     மூலவர் - ஆட்சீஸ்வரர் - சிவலிங்கத் திருமேனி - சுயம்பு. தாழ
அமைந்துள்ள அகலமான சதுர ஆவுடையார். திருமேனி சொரசொரப்பாக
வுள்ளது. பெருமானுக்கு முன்பு நின்று நாம் வழிபடுமிடத்தில் கீழே
கிணறுள்ளதாம். கருங்கற்கள் போட்டு மூடப்பட்டுள்ளது. மழைக்காலத்தில்
கற்களின் இடுக்கு வழியாகப் பார்த்தால் நீர் இருப்பது நன்கு தெரியுமாம்.
சுவாமியின் பின்புறம் வெட்டுப் பட்ட பள்ளம் உள்ளது.