வாள் கட்டாரியும் இடக்கைகளில் உடுக்கைபாவனை, கேடயம், கபாலம் ஆள்காட்டி விரல் பூமியைச் சுட்டும் நிலையும், தலை மாலையையே மார்புக் கச்சமாகக் கட்டியிருக்கும் நிலை - நீண்டு தொங்கும் தலைமாலை - கோரைப் பற்கள் - பெரிய உருண்டை சின விழிகள் - நீண்ட கால்களில் தண்டச் சரங்கள் - சாய்ந்த நிலை - சூலம் - அம்மம்மா” எவ்வளவு அற்புதமான - வக்கிரமான திருவுருவம். இங்குப் பௌர்ணமி விசேஷம். பௌர்ணமி நாளில் விழுப்புரம், பாண்டிச்சேரி முதுலிய ஊர்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் விடப்படுமாதலின் ஏராளமானோர் வந்து தரிசித்துச் செல்கின்றனர். வெள்ளிக்கவசம் சார்த்தப்படுகிறது. சந்நிதிக்கு எதிரில் வக்ராசுரன் பூசித்த ‘வக்கிர லிங்கம்’ உள்ளது. மேற்கு நோக்கியது - சற்றுப் பெரிய லிங்கம் நேரே சென்றால். வலப்பால் ஒருகல் மண்டபம் உள்ளது - பழுதடைந்த நிலை. பெரிய நந்தி (கல்லாலானது) உள்ளது. இடப்பால் விநாயகர் சந்நிதி. அடுத்துள்ள கோபுரம் ‘கிளிக்கோபுரம்’ என்றழைக்கப்படுகிறது. மூன்று நிலைகளையுடையது. உள்பிராகாரத்தில் குண்டலி மாமுனிவர் சந்நிதி - முனிவரின் சமாதியின் மீது சிவலிங்கம் உள்ளது. இதற்குக் கோஷ்டமூர்த்தமாகத் தட்சிணாமூர்த்தி, திருமால், வரதராஜப் பெருமாள் உள்ளனர். எதிரில் கருடாழ்வார் உள்ளார். சஹஸ்ரலிங்கம் உள்ளது. வலமாக வந்து படிகளேறி மூலவரைத் தரிசிக்கச் செல்ல வேண்டும். துவார பாலகர்கள் இருபுறமும் உளர். உள்சுற்றில் நால்வர் பிரதிஷ்டை. கோஷ்ட மூர்த்தமாகத் தட்சிணாமூர்த்தியும், விநாயகரும், ஆறுமுகரும், துர்க்கையும் உள்ளனர். சண்டேசுவரர் எதிரில் உள்ளார். பின்னால் சுவர் ஓரமாகப் பிரம்மா, அர்த்தநாரீஸ்வரர், பைரவர் சிலாரூபங்கள் வரிசையாக உள்ளன. சதுரஅடிப்பாகத்தின் மீதமைந்த வட்டமான ஆவுடையாரில் உள்ள மூலவர் அழகிய திருமேனி மும்முகத்துடன் விளங்குகிறது - கம்பீரமான தோற்றம். அர்த்த மண்டபத்தில் நடராஜா கால் மாறியாடும் திருக்கோலத்தில் காட்சி தருகின்றார். தூக்கிய திருவடி இடுப்புக்குமேல் வரை வந்துள்ளது. புதிய அமைப்புடையது. இதை ‘வக்கிரதாண்டவம்’ என்று குறிப்பிடுகின்றனர். அம்பாள் சந்நிதி நின்ற திருக்கோலம் - தெற்கு நோக்கிய சந்நிதி. நவக்கிரகச் சந்நிதியில் சனிபகவானின் வாகனமாகிய காகம் வழக்கத்திற்கு மாறாகத் தென்புறம் நோக்கியுள்ளது. |