ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களின் பொன்விழாத் திட்டத்தில் நிதியுதவி பெற்றும், அரசு மற்றும் அன்பர்களின் ஆதரவிலும் திருப்பணிகள் செய்யப்பட்டு அக்ஷய ஆண்டு ஆனி 4ஆம் நாள் (18-6-1986-ல்) கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது. இத்தலத்திற்கு அருகாமையில் ‘இரும்பை மாகாளம்’ என்னும் தலமுள்ளது. கல்வெட்டுச் செய்திகள் : இத்திருக் கோயிலில் உள்ள ஐந்து கல்வெட்டுக்கள் அரசியலாரால் படியெடுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் விக்ரம சோழதேவர், குலோத்துங்க சோழ தேவர் ஆகிய இருவரும் குறிப்பிடப் பட்டுள்ளனர். விக்ரமசோழ தேவரின் ஆறாவது ஆட்சி ஆண்டுக் காலத்தில் இவ்வூர் ஜயங்கொண்ட சோழ மண்டலத்து ஓய்மானாடான விஜயராஜேந்திர சோழவள நாட்டுப் பெரு வேம்பூர் நாட்டுத் தேவதானம் திருவரைசிலி என்றும், பன்னிரண்டாவது ஆட்சியாண்டில் “ஓய்மானாட்டுத் திருவரசிலி” என்றும் ; பதினாறாவது ஆட்சியாண்டில் “ஜயங்கொண்ட சோழ மண்டலத்து ஓய்மானாடான விஜயராஜேந்திர சோழவள நாட்டுப் பெருவேம்பூர் நாட்டுத் திருவரசிலி” என்றும் குறிக்கப் பெற்றுள்ளது. “மிக்க காலனைவீட்டிமெய் கெடக் காமனை விழித்துப் புக்க வூரிடு பிச்சையுண்பது பொன்றிகழ் கொன்றை தக்கநூறிதழ் மார்பிற்றவள வெண்ணீ றணிந்தாமை அக்கினாரமும் பூண்ட அடிகளுக்குஇடம் அரசிலியே” (சம்பந்தர்) “- தேர்ந்தவர்கள் தத்தமது மதியாற்சாரும் அரிசிலியூர் உத்தம மெய்ஞ்ஞான ஒழுக்கமே” (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. அரசலீஸ்வரர் திருக்கோயில் ஒழிந்தியாப்பட்டு & அஞ்சல் வானூர் (வழி) வானூர் வட்டம் - விழுப்புரம் மாவட்டம். |