பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 149


‘கடுவெளிச்சித்தர்’ என்பவர் இங்குத் தவஞ்செய்து வந்தார். நாட்டில் பஞ்சம்
ஏற்பட்டது. மன்னன் பஞ்சத்திற்கான காரணம் தெரிந்து அறிவிப்பவர்க்குப்
பரிசு தருவதாக அறிவித்தான். பழுத்த அரசு இலையினையே உணவாக
உண்டு தவஞ்செய்து வந்த இச்சித்தரைக் கண்டு கேட்க அவ்வூரிலிருந்த
வள்ளி என்னும் பெயருடைய தாசி எண்ணினாள். அவர் தவம்
செய்யுமிடத்திற்கு வந்தாள். தவத்திலிருந்த சித்தர் பழுப்பிலையை உண்ணக்
கையை நீட்டியபோது அவள், அவர் கையில் உணவை இட்டாள்.
அதைப்பெற்று உண்டமையால் உணர்வு வர, சித்தர் கண் விழித்துப் பார்க்க,
அவளும் நாட்டில் பஞ்சம் நீங்கிச் செழுமை உண்டாக அவரிடம்
வேண்டினாள். சித்தர் ஆலயத்திற்கு வந்தார். அப்போது தாசியும் தன்
பணியாக நடனமாடினாள். ஆடும்போது அவள் காற்சிலம்பொன்று அவிழ்ந்து
விழ அதைக்கண்ட கடுவெளிச்சித்தர் அச்சிலம்பை அவள் காலிற் பூட்டிவிட,
மக்கள் இதைக்கண்டு பரிகாசஞ் செய்தனர்.

     மனமுதிர்ச்சியடையாத மக்கள் ஏளனஞ் செய்ததைக் கண்ட சித்தர்,
மனம் பொறாது, இறைவனை நோக்கிப் பாட, இறைவனின் திருமேனி மூன்று
சில்லுகளாக (பிளவுகளாக) வெடித்தது. வெடிக்கப் பாடிய சித்தரின் பாட்டு :-

     “வெல்லும் பொழுது விடுவேன் வெகுளியை
      செல்லும் பொழுது செலுத்துவேன் சிந்தையை
      அல்லும் பகலும் உன்னையே தொழுவேன்
      கல்லும் பிளந்து கழுவெளியாமே.”

     சிவலிங்கத் திருமேனி வெடித்ததறிந்து மக்கள் பயந்து திகைத்தனர்.
சித்தரின் திருவடிகளில் வீழ்ந்து தங்கள் பிழைபொறுக்க வேண்டினர்.
மனமிரங்கிய கடுவெளிச்சித்தர் மீண்டுமொரு பாடலைப் பாடினார்.

     “எட்டும் இரண்டும் அறிந்த எந்தனை
      எட்டும் இரண்டும் அறிந்த உந்தனை
      எட்டும் இரண்டும் ஒன்றதாகுமே”

     இவ்வாறு ஒட்டப்பாடியதும் வெடித்து விழுந்த 3 சில்லுகளுள் 2
சில்லுகள் வந்து பழையபடியே ஒட்டிக்கொண்டன. ஒன்றுமட்டும் வெளியே
போய் விழுந்தது. அச்சில்லு விழுந்த இடம் ‘கழுவெளி’ என்னும் பெயரில்
சிறு கிராமமாகப் பக்கத்தில் உள்ளது. (இச்செய்தி, கோயிலில் வழிபாடாற்றும்
குருக்கள் வழியாகப் பெற்றதாகும்.)