கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறது. அழகான கோபுரம் பல்வகைச் சிற்பங்களும் கொண்டது. இக்கோபுரவாயிலில் மேல்பக்கச்சுவரின் தென்பால் மெய்கண்டார் கோயில் உள்ளது. நேர் எதிரில் கலிக்கம்ப நாயனார் காட்சி தருகிறார். இந்நாயனார் அவதரித்த தலமிது. மெய்கண்டாரின் தந்தையார் அச்சுத களப்பாளர் இப்பகுதியில் வாழ்ந்தவராவார். 30அடி உயரமுள்ள அழகான துவஜஸ்தம்பம் - பக்கத்தில் கிழக்கு நோக்கிய பிரதோஷ நந்தி சந்நிதி உள்ளது. உள் நுழைந்தால் பதினாறுகால் மண்டபம். மூலவரின் - கர்ப்பக் கிருகத்தின் விமானம் ஐராவதம் வழி பட்டதற்கு அடையாளமாக யானை நிற்பது போல் அமைந்துள்ளது. மூலலிங்கம் சுயம்பு. சற்று உயரமானது. ஆவுடையார் சதுர வடிவானது. கர்ப்பக்கிருகத்தின் முன்வாயில் தவிர, ஏனைய மூன்று புறங்களிலும் இறைவனைக் கண்டு வணங்குமாறு சன்னல்கள் - பலகணிகள் அமைந்திருப்பது சிறப்புடையது. சுற்றுப்பகுதியில் உற்சவத் திருமேனிகள் காட்சியளிக்கின்றன. மூலஸ்தானத்திற்கு வடபால் கட்டு மலைமேல் சௌந்தரேஸ்வரர் (சிவலிங்கம்) சந்நிதி உள்ளது. தனிக்கோபுரத்துடன் கூடிய கோயில். ஏறுதற்குப் படிகள் உள்ளன. இத்தலத்திற்கு அருகில் உள்ள சௌந்தர சோழபுரத்தில் வாழ்ந்த சௌந்தரவல்லி என்னும் தேவரடியார், பண்டம் மாற்ற இத்தலத்திற்கு வரும்போது, கடைவீதியிலிருந்தே வழிபடுவதற்கேற்ப இக்கோயில் கட்டப்பட்டதென்று ஒரு செய்தி சொல்லப்படுகிறது. வெள்ளாற்றின் கரையில் உள்ள இத்தலத்தினை வழிபடவந்த சோழ மன்னன், ஆற்றில் வெள்ளம் வந்தமையால் அக்கரையில் இருந்தவாறே தவஞ்செய்ய, அவனுக்கு அருள்புரியவேண்டி, இறைவன் அவன் காணுமளவுக்கு உயர்ந்து காட்சிதந்தார். அதுவே இம்மலைக் கோயிலாகும் என்ற செவிவழிச் செய்தியொன்றும் இது தொடர்பாகச் சொல்லப்படுகிறது. நால்வர் சந்நிதிகள், சேக்கிழார், தண்டபாணி உருவங்கள், கோடிவிநாயகர், சோமாஸ்கந்தர், விசுவேஸ்வரர், முருகன், மகாலட்சுமி சந்நிதிகளும் உள. கட்டுமலைக் கோயிலின் கீழ்ப்பகுதியில் பிரளய காலேஸ்வரி அம்மை சிலையுள்ளது. தலமரத்தின்கீழ் சண்டேஸ்வரர் சந்நிதி. அம்மன் சந்நிதி, சுவாமிக்கு வடபாலுள்ளது. சண்டிகேஸ்வரி சந்நிதியுமுள்ளது. ஆலயத்தில் திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. |