பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 157


வேண்டிப் பெற்ற விழா கொண்டாடப்படுகிறது. அம்பாளுக்கு ஆடிமாத
உற்சவம் சிறப்பாக நடத்தப் பெறுகிறது. ஆவணிமூல விழா, நவராத்திரி,
சஷ்டி விழா, தைப்பூசம், சிவராத்திரி, பங்குனி உத்திரம் முதலிய விழாக்களும்
சிறப்பாக நடத்தப் பெறுகின்றன. மெய்கண்டாரின் தந்தையான அச்சுத
களப்பாளர் பெயரில் ஊருக்கு மேற்கில் ‘களப்பாளர்மேடு’ என்னும்
இடமுள்ளது. அங்குச் சிறிய கோயில் மெய்கண்டாருக்கு உள்ளது. மறைஞான
சம்பந்தர் பிறந்த தலமும் இதுவே. இவர் பெயரில் தனி மடம் உள்ளது. சேது
மகாராசா இத்திருக்கோயிலில் திருப்பணிகள் செய்ததோடு தேரும் அமைத்துத்
தந்துள்ளார். சோழர் காலக் கல்வெட்டுக்கள் பல இக்கோயிலில் உள்ளன.
கல்வெட்டுக்களில் இத்தலத்து இறைவன் “தூங்கானை மாடமுடைய நாயனார்”
என்று குறிப்பிடப்படுகின்றார். கோயிலுக்குப் பொன், பசு, நிலம் முதலியவை
விட்ட செய்திகள், கல்வெட்டால் தெரிய வருகின்றன.

     “ஒடுங்கும் பிணிபிறவி கோடன் றிவை உடைத்தாய
          வாழ்க்கையொழியத் தவம்
      அடங்கும் இடங்கருதி நின்றீரெல்லாம் அடிகளடி
          நிழற் கீழாளாம் வண்ணம்
      கிடங்கும் மதிலும் சுலாவியெங்குங் கெழு மனைகள்
          தோறும் மறையின்ஒலி
      தொடங்குங் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானை
          மாடம் தொழுமின்களே.”
                                       (சம்பந்தர்)

  “பொன்னார் திருவடிக்கு ஒன்றுண்டு விண்ணப்பம் போற்றி செய்யும்
  என் ஆவிகாப்பதற்கு இச்சையுண்டேல் இருங்கூற்றகல
  மின்னாரும் மூவிலைச் சூல மென்மேல் பொறி மேவு கொண்டல்
  துன்னார் கடந்தையுள் தூங்கானை மாடச்சுடர்க்கொழுந்தே" (அப்பர்)

     “திருமருவு நாரணனும் பிரமன் ஆதித்தேவருடன்
          யாவருந்தந் தெளிவினாலும்
     பெருகுபல மறையாலும் அளக்க வொண்ணாப்
          பெரிய பராபரமெங்கும் பிறங்குஞ்சோதி
     அருள்பரை யினுடன்கூடிப் புவனந்தந்து
          மதைக்காத்து மழிக்கின்ற கடந்தையண்ணால்
     மருவு பிரளயங்காத்த வள்ளலாகும்
          மாதேவன் திருவடியை வழுத்தி வாழ்வாம்.”
                                   (திருக்கடந்தைப் புராணம்)