பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 169


39/7. திருஅதிகை

திருவதிகை.

     நடுநாட்டுத் தலம்.

     கடலூர் மாவட்டத்திலுள்ள பண்ருட்டியிலிருந்து 2 கி.மீ. தொலைவில்
உள்ளது. சென்னை, கடலூர், விருத்தாசலம், விழுப்புரம், சிதம்பரம் முதலிய
ஊர்களிலிருந்து பண்ருட்டிக்குப் பேருந்து வசதி உள்ளது.

     பண்ருட்டி பேருந்து நிலையத்திலிருந்து கடலூர் பாதையில் சென்றால்
திருவதிகையை அடையலாம். கோயில்வரை வாகனங்கள் செல்லும். பண்ருட்டி
இருப்புப்பாதை நிலையம்.

     அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்று. திரிபுரத்தை எரித்த வீரச்செயல்
நிகழ்ந்தது. ஞானசம்பந்தருக்கு இறைவன் திருநடனம் காட்டிய தலம்.
அப்பரின் தமக்கையர் திலகவதியார் தங்கியிருந்து திருத்தொண்டு செய்து
வந்த தலம். சூலை நோயின் துன்பம் தாளப்பெறாத அப்பர் பெருமான்,
யாருமறியாமல் பாடலிபுத்திரத்தை (திருப்பாதிரிப்புலியூரை) விட்டு நீங்கி,
இங்கு வந்து, தமக்கையாரைக் கண்டு, தொழுது, திருவாளன் திருநீறு தரப்
பெருவாழ்வு வந்ததென்று பணிந்து ஏற்று, உருவார அணிந்து, அவர்பின்
சென்று, அதிகைப் பிரான் அடிமலர் வீழ்ந்து வணங்கி, “ஆற்றேன்
அடியேன்” என்று “கூற்றாயினவாறு” பதிகம் பாடிச் சூலை நீங்கப் பெற்ற
அற்புதத்தலம். சுருங்கச் சொல்லின், சைவத்துக்குத், திருத்தொண்டுக்கு
உறைப்பான திருநாவுக்கரசரை வழங்கியருளிய பெருமைமிகு தலமிதுவே.

     சைவ சித்தாந்த சாத்திரங்களுள் ஒன்றான ‘உண்மை விளக்கம்’ நூலை
அருளிய ‘மனவாசகங்கடந்தாரின்’ அவதாரத் தலம் இதுவே. இத்தலத்தை
மிதிக்க அஞ்சி சுந்தரர் அருகிலிருந்த சித்தவடமடத்தில் தங்கியதும் -
திருவடி தீட்சை பெற்றதும் ; பல்லவனான மகேந்திர வர்மனின் மனத்தை
மாற்றிச் சமண் பள்ளிகளை இடித்துக் குணபரவீச்சரம் எழுப்பச் செய்ததும் ;
இத்தலத்தின் பெருமையைப் பறைசாற்றும் நிகழ்ச்சிகளாம்.

     அதிரைய மங்கலம், அதிராஜமங்கலம், அதிராஜமங்கலியாபுரம் என்னும்
பெயர்கள் இத்தலத்திற்குரியனவாகக் கல்வெட்டுக்களிற் காணப்படுகின்றன.