பக்கம் எண் :

170 திருமுறைத்தலங்கள்


மணவிற் கூத்தனான காலிங்கராயன் என்பவன் இக்கோயிலுக்குப்,
பொன்வேய்ந்து நூற்றுக்கால் மண்டபம், மடைப்பள்ளி, யாகசாலை
ஆகியவற்றை அமைத்து, அம்பாள் கோயிலையும் கட்டுவித்தான் என்பது
கல்வெட்டுச் செய்தி. தென்கங்கை எனப்படும் கெடிலநதி பக்கத்தில்
ஓடுகின்றது.

     இறைவன் - வீரட்டேஸ்வரர், வீரட்டநாதர், அதிகைநாதர்.
     இறைவி - திரிபுரசுந்தரி.
     தலமரம் - சரக்கொன்றை.
     தீர்த்தம் - கெடிலநதி.

     மூவர் பாடல் பெற்றது.

     மிகப் பெரிய கோயில், சுவாமி கர்ப்பக்கிருகம் தேர்போலப்
பதுமைகளால் அலங்கரிக்கப்பட்டு, நிழல் பூமியில் சாயாதபடிக்
கட்டப்பட்டுள்ளது. கோயிலுக்கு முன்னால் பதினாறுகால் மண்டபம் உள்ளது.
இதைத் திருநீற்று மண்டபம் என்றழைக்கிறார்கள். இம்மண்டபத் தூண்களில்
ரிஷபாரூடர், அப்பர், மயில் வாகனன் முதலிய சிற்பங்களும், இக்கோயிலைத்
திருப்பணி செய்வித்த செட்டியார் சிற்பங்களும் உள்ளன. கோயிலுக்கு எதிரில்
கருங்கல் தூண்கள் மொட்டையாக நின்று கொண்டிருக்கும் நிலையில்
திலகவதியார் மடம் காட்சியளிக்கிறது. பதினாறுகால் மண்டபத்தின் பக்கத்தில்
அப்பர் சுவாமிமடம் - திருவாவடுதுறை ஆதீனத்திற்குரியது உள்ளது.

     உயர்ந்த ராஜகோபுரம். ஏழுநிலைகளையுடையது. கோபுர வாயிலில்
இருபுறங்களிலும் அளவற்ற சிற்பங்கள் உள்ளன. வலப்பக்கத்தில் சற்று
உயரத்தில் திரிபுமெரித்த கோலம் மிக அழகாக வடிக்கப்பட்டுள்ளது. அதன்
கீழ் கஜசம்ஹாரகோலம்.

     வாயிலின் இருபுறங்களிலும் நடனக்கலைச் சிற்பங்கள் (பரத
சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள 108 கரணங்களை விளக்கும் சிற்பங்கள்)
அளவிறந்துள்ளன. மிதித்தேறும் படியின் இருபுறத்திலும் அழகான நடன
மாதரின் உருவங்கள். அப்பப்பா ! வைத்த கண்களை வாங்காமல்
பார்த்தாலும் வேட்கை தணியவில்லை.

     உட்புறத்தில் மற்றொரு பதினாறுகால் மண்டபம் உள்ளது. இம்
மண்டபத்தின் இடப்பால் ‘சக்கரதீர்த்தம்’ எனப்படும் திருக்குளம் உள்ளது.
இம்மண்டபத்தில் புகும்போது முதலில் உள்ள இரு தூண்களில் ஒன்றில்
சுப்பிரமணியத் தம்பிரான் (அமர்ந்த நிலை)