பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 171


சிற்பமும், இதற்கு நேர் எதிர்த்தூணில் சிவஞானத் தம்பிரான் (நின்று
கைகூப்பிய நிலை) சிற்பமும் உள்ளன. சுப்பிரமணியத் தம்பிரான் என்பவர்
தான் இக்கோயிலைத் திருத்திச் செப்பம் செய்தவர் என்கின்றனர். இவர்
சீடரான சிவஞானத் தம்பிரான்தான் முதன் முதலில் இத்திருக்கோயிலில்
அப்பர் பெருமானுக்குப் பத்து நாள்கள் விழா எடுத்துச் சிறப்பாக நடத்தினார்
என்பர்.

     உள்கோபுரம் ஐந்து நிலைகளையுடையது. கவசமிட்ட கொடிமரம்
கொடிமரத்து விநாயகர் தரிசனம், முன்னால் நந்தி. வலப்பால் நூற்றுக்கால்
மண்டபம் உள்ளது. இதைத் தேவசபை என்கின்றனர். நடராச அபிஷேகம்
இம்மண்டபத்தில் நடைபெறும். உள்கோபுரம் தாண்டினால், உயரமான நந்தி
உள்ளது. ஒருபுறம் முருகப் பெருமானும், மறுபுறம் கணபதியும் காட்சியளிக்
கின்றனர். வலமாக வரும்போது அப்பர் சந்நிதி (உற்சவமூர்த்தி) உள்ளது.
சேக்கிழார் முதலாக அறுபத்துமூவர் மூலத் திருமேனிகள் உள்ளன. அடுத்துத்
தலமரம் சரக்கொன்றை உள்ளது. பக்கத்தில் திலகவதியார் சந்நிதி. அடுத்து
சனீஸ்வரர், அம்பாள் திருமேனிகள் உள. முன்னால் பெரிய சிவலிங்கம்
ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அடுத்து அப்பர் சந்நிதி. மூலமூர்த்தம் உள்ளது.
அமர்ந்த திருக்கோலம் - சிரித்த முகம் - தலை மாலை கையில்
உழவாரப்படை தாங்கிய பேரழகு. அம்பாள் சந்நிதி தனிக்கோயிலாகவுள்ளது.
முன் மண்டபம், எதிரில் கவசமிட்ட கொடிமரம், பலிபீடம், நந்தி உள்ளன.

     பிராகாரத்தில் அடுத்து விநாயகர் சந்நிதியும் பக்கத்தில் பஞ்சமுக
சிவலிங்கமும் (பசுபதிநாதர்) உள்ளன. வரிசையாகப் பல சிவலிங்கத்
திருமேனிகள் உள்ளன. யாகசாலை, நவக்கிரக சந்நிதிகளையடுத்து, நடராச
சபை உள்ளது. பக்க வாயிற்படிகள் வழியே சென்று, முன்
மண்டபத்தையடைந்து, துவாரபாலகரை வணங்குகிறோம். திரிபுராந்தகர்
உற்சவ சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது. உள் மண்டபத்தை அடைந்ததும்
நேரே மூலவர் சந்நிதி. மூலவர் - சிவலிங்கத் திருமேனி. கிழக்கு நோக்கியது.
பெரிய திருமேனி - பெரிய ஆவுடையார். சிவலிங்கத் திருமேனி பதினாறு
பட்டைகளுடன் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றது. பின்னால் சுவாமி அம்பாள்
உருவங்கள் சோமாஸ்கந்த வடிவில் புடைமூர்த்தமாகச் சுதையில்
அமைக்கப்பட்டுள்ளன - கல்யாண திருக்கோலம். தெவிட்டாத தரிசனம்.
அதிகைக் கெடிலநாதன் அருளைப் பருகப் பருகப் பசி ஆறவே ஆறாது.
எத்தனை நேரம் நின்று தரிசித்தாலும் பிரிய மனம் வரவில்லை.