பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 175


உள்ளது. எதிரில் கவசமிட்ட கொடிமரம், பலிபீடம் முதலியன உள்ளன.
கொடிமர விநாயகர். சுந்தர விநாயகராகக் காட்சி தருகிறார். நந்தி சற்றுப்
பெரியது. தலப்பதிகக் கல்வெட்டுள்ளது. அடுத்து வாகன மண்டபம் உள்ளது.
உள்வாயிலைக் கடந்ததும் உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்
பட்டுள்ளன. நால்வர், இரு மனைவியருடன் சுந்தரர், நடராசர், சிவகாமி,
முருகன், விநாயகர், வள்ளி, தெய்வயானை முதலிய உற்சவத் திருமேனிகள்
உள்ளன. நேரே மூலவர் தரிசனம் கிழக்கு நோக்கிய சந்நிதி - சிறிய கருவறை.
சிவலிங்கத்தின் பாணம் சற்று உயரமாகவுள்ளது. நடராச சபை உள்ளது.
உள்பிராகாரத்தில் நரசிங்க முனையரையர் பூசித்த மிகப் பெரிய சிவலிங்க
மூர்த்தம் உள்ளது.

     பொல்லாப் பிள்ளையார், சேக்கிழார், நால்வர், அறுபத்துமூவர்,
வலம்புரி விநாயகர், சோமாஸ்கந்தர், ஆறுமுகர் முதலிய சந்நிதிகளும்,
தொடர்ந்து யுகலிங்கங்களும், கஜலட்சுமி சந்நிதிகளும் உள்ளன. கருவறைச்
சுவரில் சண்டேசுரர் வரலாறு சிற்பங்கள் வடிவில் - பால் கறப்பது, தந்தையார்
மரத்தின் மீதேறிப் பார்ப்பது, திருமஞ்சனம் செய்வது - தந்தையின்
கால்களைத் துணிப்பது . இறைவன் கருணை செய்வது - வடிக்கப்பட்டுள்ளது.
நவக்கிரக சந்நிதியில் சுக்கிரனுக்கு எதிராக அவன் வழிபட்ட சுக்கிரலிங்கம்
உள்ளது. நவக்கிரகங்களின் நடுவில் உள்ள சூரியன் திசைமாறி மூலவரைப்
பார்த்தவாறு உள்ளார். பக்கத்தில் பைரவர் திருமேனிகளும் சூரியனும்
உள்ளார்.

     தலமரம் ‘நாவல்’. வெளிப் பிராகாரத்தில் இரண்டு உள்ளன. அம்பாள்
கோயில் தனியே உள்ளது. இதுவும் கிழக்கு நோக்கியது. அழகான முன்
மண்டபம் உள்ளது. அம்பிகை நான்கு திருக்கரங்களுடன் நின்ற திருக்கோலம்.

     கோஷ்ட மூர்த்தமாகவுள்ள தட்சிணாமூர்த்தி உருவம் - ரிஷபத்தின்
முன்னால் நின்று வலக்கையை ரிஷபத்தின்மீது ஊன்றி, மறுகையில்
சுவடியேந்தி நிற்கும் அமைப்பு - கண்டு மகிழத் தக்கது. ஆலயத்துள்
வரதராஜப் பெருமாள்  சந்நிதி, ஸ்ரீதேவி பூதேவியுடன் காட்சி தரும்
கோலத்தில் உள்ளது. மூலவர் முன்பு உற்சவ மூர்த்தங்களாகப் பெருமாள்,
தாயார், இராமர், இலக்குவன் சீதை முதலியன வைக்கப்பட்டுள்ளன.

     கோயிலுக்குப் பக்கத்தில் சுந்தரர் மடாலயம் உள்ளது. அழகான
முன்மண்டபம். சுந்தரர் கையிற் செண்டுடன் அழகாகக் காட்சி தருகின்றார்.
இதற்கு எதிர் வீட்டில்தான் கோயில் குருக்கள் வசிக்கின்றார். இங்குள்ள
உட்கோயில் தொண்டீச்சரம் எனப்படும்.