| பிரமனும் அகத்தியரும் வழிபட்ட பெருமையுடைய பதி. சுந்தரர் இத்தலத்தில் பரவையருக்காகப் பெருமானை வேண்டிப் பொன்பெற்று அப்பொன்னை இங்குள்ள மணிமுத்தாற்றில் இட்டுத் திருவாரூர்க் கமலாலயத்தில் எடுத்துக்கொண்டார் என்பது வரலாறு. இத்தலத்தில் இறப்பவருக்கு; இறைவன் அவ்வுயிரைத் தன் தொடைமீது கிடத்தி மந்திர உபதேசம் செய்ய, இறைவி முன்தானையால் விசிறி இளைப்பாற்றுகின்றாள் என்பது கந்தபுராணம் வாயிலாக நாம் அறியும் செய்தியாகும். “தூசினால் அம்மைவீசத் தொடையின்மேற் கிடத்தித் துஞ்சும் மாசிலா உயிர்கட் கெல்லாம் அஞ்செழுத்தியல்பு கூறி ஈசனே தனது கோலம் ஈந்திடும் இயல்பால் அந்த காசியின் விழுமிதான முதுகுன்ற வரையும் கண்டான்.” (கந்தபுரா - வழிநடைப்படலம்) இறைவன் - விருத்தகிரீஸ்வரர், பழமலைநாதர். இறைவி - விருத்தாம்பிகை, பெரிய நாயகி, பாலாம்பிகை. தீர்த்தம் - மணிமுத்தாறு ; அக்கினி, குபேர, சக்கர தீர்த்தங்கள். தலமரம் - வன்னி தலவிநாயகர் - ஆழத்துப் பிள்ளையார் மூவர் பாடலும் பெற்ற பழம்பதி. அருணகிரிநாதர், குருநமசிவாயர், சிவப்பிரகாசர், இராமலிங்க வள்ளலார் முதலிய மகான்களும் இப்பதியைப் புகழ்ந்து பாடியுள்ளனர். இத்தலத்தின் பெயரில் ‘குன்றம்’ என்ற சொல் இருப்பினும், காண்பதற்கு மலை ஏதுமில்லை. குன்று பூமியினடியில் அழுந்தியிருப்பதாகத் தலவரலாறு கூறுகிறது. இதற்கேற்ப இப்பகுதியில் பூமிக்கடியில் பாறைகளே உள்ளன. எல்லாமலைகளும் தோன்றுவதற்கு முன்னரே இம்மலை தோன்றி மறைந்தமையால் இதற்குப் பழமலை - முதுகுன்றம் என்று பெயர் வந்தது. (விருத்தம் - பழமை, அசலம் - மலை) வடக்குக் கோபுர வாயிலுக்கு நேரே வடபால் மணிமுத்தாற்றில் நீராட வேண்டும். இவ்விடமே புண்ணிய மடு எனப்படுவதாகும். மிகப்பெரிய கோயில். பெரிய சுற்று மதில். நாற்புறமும் கோபுரங்கள் ஏழுநிலைகளுடன் காட்சியளிக்கின்றன. கீழைக்கோபுர வாயிலின் முன்னால் வெளியே உள்ள பதினாறுகால் மண்டபத்தில் வட, தென்பாற் சுவர்களில் 72 வகையான பரதநாட்டியப் பாவனை உருவங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன. தலம்-12 |