வாயிலின் உட்புறம் முன்னால் இருப்பது கைலாசப் பிராகாரம். அதில் முன்னால் உயர்ந்துள்ள கருங்கல் மண்டபம் தீபாராதனை மண்டபம் எனப்படும். அடுத்து மேற்புறமுள்ள பெரிய மண்டபம் நந்தி மண்டபம். ஆடிப்பூரத்தில் கல்யாணப் பெருவிழா இங்குதான் நடைபெறும். இதன் தென் பாலுள்ளது விபச்சித்து முனிவர் மண்டபம் ஆகும். மாசிமகத்தில் 6ஆம் நாள் விழாவில் - இவ்வொரு நாளில் மட்டுமே உலா வருகின்ற - உற்சவ மூர்த்தி பெரிய நாயகர் காட்சி தர, விபசித்து முனிவர் தரிசிக்கும் விழா இங்குத்தான் நடைபெறுகிறது. இம்மண்டபத்தின் நேர்கிழக்கில் கிணறு வடிவத்தில் அக்னி தீர்த்தமும் ; அதன் தெற்கில் சொற்பொழிவு மண்டபமும் உள்ளன. தலவிநாயகர் ஆழத்துப் பிள்ளையார், பெயருக்கேற்ப சந்நிதி ஆழத்தில் உள்ளது. இறங்குவதற்குப் படிக்கட்டுகள் உள்ளன. தனிச் சுற்றுமதிலும் கோபுரமும் கொண்டு இச்சந்நிதி விளங்குகின்றது. திருமாலின் சக்கரத்தால் உண்டாக்கப்பட்ட சக்கர தீர்த்தத்தைச் சுற்றிலும் நந்தவனம் உள்ளது. இக்கைலாசப் பிராகாரத்தின வட மேற்கு மூலையில் 28 ஆகமக் கோயில் உள்ளது. முருகக் கடவுள் 28 ஆகமங்களையும் சிவலிங்கங்களாக வைத்துப் பூசித்தார் என்பது இதன் வரலாறு. காமிகேசுவரர் முதலாக வாதுளேசர் ஈறாக ஆகமங்களின் பெயர்களை இத்திருமேனிகள் பெற்றுள்ளன. பெரிய நாயகி கோயில் கிழக்கு நோக்கியுள்ளது. தனிக்கோபுரம் உள்ளது. அம்பிகை - விருத்தாம்பிகை சந்நிதி. பெரிய கோயிலின் முன்னால் வெளியில் உள்ள அலங்கார மண்டபத்தில் கொடி மரமும் நந்தியும் உள்ளன. அருகில் குகை முருகன் சந்நிதியும் இங்கு வாழ்ந்து சாரூப நிலையடைந்த நாதசர்மா, அநவர்த்தினி ஆகியோரின் பெயர்களில் அமைந்த கோயில்களும் உள்ளன. பக்கத்தில் குபேர தீர்த்தம். அடுத்துள்ளது யாகசாலை மண்டபம். தென்புறமுள்ள நூற்றுக்கால் மண்டபம் மிகப் பழமையானது. சக்கரங்கள் பொருந்தி குதிரைகள் பூட்டப்பட்ட நிலையில் உள்ளது. இதுவே கைலாசப் பிராகாரத்தின் முடிவு. அடுத்துள்ளது இரண்டாவது சுற்றுமதில். உட்பிராகாரத்திற்கு வன்னியடிப் பிராகாரம் என்று பெயர். மடைப்பள்ளிக்குப் பக்கத்தில் தலமரமான வன்னிமரம் உள்ளது. இங்குள்ள மேடையில் விநாயகர், விபச்சித்துமுனிவர், உரோமேச முனிவர், விதர்க்கண செட்டி (வழிபட்டுச் சிவகணமான ஓர் அன்பர்) குபேரன் தங்கை முதலியோரின் உருவங்களும் உள்ளன. வன்னியடிப் பிராகாரத்தில் பஞ்சலிங்கங்கள் |