செங்கற்பட்டு - அரக்கோணம் இருப்புப் பாதையில், காஞ்சிபுரம் இருப்புப்பாதை நிலையம் - மத்தியில் உள்ளது. காஞ்சிபுரம், வரலாற்றுக்கு முற்பட்ட நகரம் என்னும் சிறப்புடையது. கி.மு.5-ஆம் நூற்றாண்டில் காஞ்சிபுரம் சிறப்பாக இருந்த செய்தி, சீன யாத்ரிகர் யுவான்சுவாங் குறிப்பின் மூலம் தெரிய வருகின்றது. கி.மு. 2-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பதஞ்சலி, தம் பாஷ்யத்துள் காஞ்சியின் சிறப்பைக் கூறியுள்ளார். தொண்டை நாட்டின் தலைநகரமாகத் திகழும் காஞ்சிபுரம், கி.பி. 3ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்த பல்லவர்களுக்குத் தலைநகராக விளங்கியது. சோழர்கள், விஜயநகர மன்னர்கள் ஆகியோர்களின் ஆட்சி முத்திரைகளும் இந்நகரில் பதிந்திருந்தன. “கல்வியைக் கரையிலாத காஞ்சிமாநகர்” என்று அப்பர் தேவாரத்தில் புகழப்படும் இத்தலம் பண்டைக்காலத்தில் கல்விக்கு இருப்பிடமாக விளங்கிக் ‘கடிகாஸ்தானத்தை’யும், புகழ்பெற்ற அறிஞர்களையும் பெற்றிருந்தது. ஹர்ஷர் காலத்தில் புகழுடன் விளங்கிய நாலந்தாப் பல்கலைக் கழகத்தின் தலைவராக விளங்கிய தர்மபாலரும், பேராசிரியர் தின்னாகரும், பௌத்த சமயத் தத்துவ நூல்களை எழுதி உதவிய போதிதர்மரும் காஞ்சியைச் சேர்ந்தவர்களே. அர்த்தசாஸ்திரம் எழுதிய சாணக்கியர், திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர், பொய்கையாழ்வார், வேதாந்த தேசிகர், வண்ணக் களஞ்சியம் நாகலிங்க முனிவர், சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான சியாமா சாஸ்திரிகள், இசைமேதை நயினாப் பிள்ளை முதலியவர்களைப் பெற்ற பேறுடையதும் இத்தலமே. மணிமேகலை வந்து தங்கி உபதேசம் பெற்ற தலம் காஞ்சியே. காஞ்சிக்குப் பக்கத்தில் உள்ள ‘ஜின காஞ்சி’ (ஜைன காஞ்சி) என்னும் பகுதி- தற்போது திருப்பருத்திக்குன்றம் என்று வழங்கும் பகுதி-பண்டை நாளில் சமணர்களுக்குக் (திகம்பரப் பிரிவினர்க்கு) கோட்டையாக விளங்கியதாகும். இங்குள்ள ஜைனக்கோயில் மிக்க சிறப்பு வாய்ந்தது. கி.பி. 14ஆம் நூற்றாண்டில் மல்லிசேனா, வாமனசூரி போன்ற சமணப் பெருமக்கள் காஞ்சியில் அனைவராலும் மதிக்கத்தக்கவர்களாக வாழ்ந்தனர். இவையெல்லாம் நோக்குமிடத்துக் காஞ்சிபுரம் சமயப் பொதுவிடமாகத் திகழ்ந்தது என்பதையும் அறிகின்றோம். வைணவத்திலும் காஞ்சி அழியாத சிறப்பைப் பெற்றுள்ளது. பொய்கையாழ்வாரும் வேதாந்த தேசிகரும் வாழ்ந்த பதி. ஸ்ரீ ராமாநுஜர் |