| இளமைக் காலத்தைக் காஞ்சியில் கழித்து அத்திகிரி அருளாளனாகிய ஸ்ரீ வரதராஜப் பெருமாளின் பேரருளைப் பெற்றார். திருமழிசையாழ்வாரும் சில காலம் காஞ்சியில் வாழ்ந்தார் என்பதும், அவர் தொடர்பான ‘சொன்ன வண்ணம் செய்த பெருமாள்’ வரலாறும் அனைவரும் அறிந்ததே. வரதராஜப் பெருமாளுக்குத் தொண்டு செய்து வாழ்ந்து வந்த ‘திருக்கச்சி நம்பிகள்’ பெருமையை அறியாதார் யார்? காஞ்சிபுரம் கோயில்கள் மலிந்த நகரம். எப்போதும் விழாக்கள் மலிந்து விளங்கும் நகரமாதலின் ‘விழவறாக் காஞ்சி’ என்று புகழப்படும் பெருமை பெற்றது. பெரும்பாணாற்றுப்படை, தண்டியலங்காரம் முதலிய நூல்கள் இத்தலத்தின் புகழைப் பாடுகின்றன. தற்கால உலகில் பட்டுப்புடவைகளுக்குப் புகழ் பெற்றது காஞ்சி. காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. பஞ்சபூதத் தலங்களுள் இது பிருதிவித் தலம். சக்தி பீடங்களுள் சிறந்ததாகிய காமகோடி பீடத்தலம் இதுவே. காமாட்சியம்பிகையின் ஆலயம் காமக்கோட்டம் எனப்படும். இறைவனிடம் இருநாழி நெல் பெற்று அம்பிகை முப்பத்திரண்டு அறங்களையும் செய்தருளிய அற்புதத் தலம். கந்தபுராணம் தோன்றிய பெருமையுடைய தலமும் இதுவே. இந்நூலாசிரியரான கச்சியப்ப சிவாசாரியார் தொண்டு செய்து வந்த குமரக்கோட்டமும் (முருகன் திருக்கோயில்) இங்குள்ளதே. கந்த புராணம் அரங்கேற்றப்பட்ட மண்டபம் இன்றும் இத் திருக்கோயிலில் கச்சியப்பர் பெயரில் நூலகமாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. ‘நகரேஷு காஞ்சி’ ‘முத்திதரும் நகர் ஏழில் முக்கியமாம் காஞ்சி’ என்றெல்லாம் புகழ்ந்தோதப்படும் இத்தலத்திற்கு 1. பிரளயசித்து 2. காமபீடம் 3. மும்மூர்த்திவாசம் 4. சிவபுரம் 5. விண்டுபுரம் 6. தபோமயம் 7. சகலசித்தி 8. கன்னிகாப்பு 9. துண்டீரபுரம் 10. சத்திய விரதக்ஷேத்திரம் 11. பூலோக கயிலாயம் 12. பிரமபுரம் என்பன வேறு பெயர்கள். திருவேகம்பமும் குமரக்கோட்டமும் காமக் கோட்டமும் சோமாஸ்கந்த வடிவில் அமைந்திருப்பது இத்தலத்திற்குள்ள தனிச் சிறப்பாகும். தீர்த்தச் சிறப்பும் இதற்குண்டு. சர்வதீர்த்தத்தின் சிறப்பு அறியாதார் யார்? ‘தரையிடங்கொளும் பதிகளிற் காஞ்சியந்தலம்’ சிறந்தது என்பது கந்த புராணத் தொடராகும். சாக்கிய நாயனார், திருக்குறிப்புத் தொண்டர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோர் வாழ்ந்த தெய்வப் பதி. |