| கண் பார்வையிழந்த சுந்தரர் திருவெண்பாக்கத்தில் ஊன்று கோலைப் பெற்றவாறே இத்தலத்திற்கு வந்து காமக்கோட்டம் பணிந்து பின்னர்த் திருவேகம்பம் அடைந்து இறையருளால் இடக்கண்பார்வை பெற்ற அற்புதம் நிகழ்ந்த தலமிதுவே. உமை, திருமகள், வாணி ஆகிய மூவரும் முறையே வழிபட்ட ஏகம்பம், காயாரோகணம் கச்சபேசம், ஆகிய கோயில்கள் உள்ள தலம். இத்தலபுராணமாகிய காஞ்சிப் புராணம் - மாதவச் சிவஞான சுவாமிகளால் இயற்றப்பட்டது - தலபுராண வரலாற்றில் மிகச் சிறப்புடைய தொரு இடத்தைப் பெற்றுள்ளதாகும். சிவஞான சுவாமிகள் காஞ்சியில் ஒரு பகுதியாக விளங்கும் பிள்ளையார் பாளையத்தில் மண்டபத் தெருவிற்குப் பக்கத்தில் உள்ள திருவாவடுதுறை ஆதீனக்கிளை மடாலயத்தில் தங்கிக் காஞ்சிப் புராணத்தை எழுதினார். பிரமன் வழிபட்ட தலமாகிய இக் காஞ்சி, நிலமகளின் உந்தித் தானம் போன்றது என்று புகழப்படுகின்றது. திசையனைத்தும் பக்தியுடன் போற்றிப் பணிந்து பரவப்படும் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஜகத்குரு ஸ்ரீ சங்கராசார்ய சுவாமிகள் ஸ்ரீ மடம் உள்ள தலம் இதுவே. அருளொழுகு தவவிழிகள் அமையப் பெற்று, அண்டி வரும் அனைவருக்கும் அருள்சொரிந்து, உலகு வாழத் தவமாற்றி, உயர்ந்தோங்கு தவந்தனில் ஒப்பில்லா மாட்சிமையுடையவர்களாகத் திகழ்ந்து வரும் காஞ்சி மாமுனிவர்களின் அருளாட்சி நனிசிறக்கும் அருமைத் தலமும் காஞ்சியே. சைவ ஆதீனங்களுள் மிகப் பழமையான ஆதீனமாகவும் மெய்கண்டதேவர் சந்தான பீடமாகவும் பெருமையுடன் திகழ்கின்ற தொண்டை மண்டலாதீனத் திருமடாலயம் இத்தலத்தில்தான் உள்ளது. இத்திருமடாலயத்தில், குருமகாசந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ ஞானப்பிரகாச தேசிக பரமாசார்ய சுவாமிகள் அவர்கள் எழுந்தருளியிருந்து (232-ஆவது பட்டம்) அருளாட்சி செய்து வருகின்றார்கள். இத்தகு அளவற்ற சிறப்புக்களையுடைய இத்தலத்தில் கயிலாயநாதர் கோயில், வைகுந்தப் பெருமாள் கோயில், கச்சபேசம் முதலிய எண்ணற்ற கோயில்கள் இருப்பினும் பாடல்பெற்ற திருமுறைக் கோயில்கள் எனப்படுபவை ஐந்தேயாகும். அவை 1. திருவேகம்பம் 2. திருமேற்றளி 3. ஓணகாந்தன்தளி 4. கச்சிநெறிக்காரைக்காடு 5. அநேகதங்காவதம் என்பன. இவற்றுள் ‘பெரிய கோயில்’ என்றழைக்கப்படும் ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோயிலே ‘கச்சித் திருவேகம்பம்’ என்று போற்றப்படும் பெருமை வாய்ந்தது. |