பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 21


     இத்திருக்கோயில் பெரிய காஞ்சிபுரம் பகுதியில் உள்ளது. திருவேகம்பம்,
திருக்கச்சியேகம்பம்,   ஏகாம்பரநாதர்   திருக்கோயில்   எனப்    பலவாறு
அழைக்கப்படுவதும் இத்திருக்கோயிலே.


     மாணிக்கவாசகர்   இத்திருக்கோயிலைக்   ‘கச்சித்   திருவேகம்பன்
செம்பொற்கோயில்’ என்று சிறப்பித்துப் பாடியுள்ளார்.   அருணகிரிநாதரின்
திருப்புகழும் உள்ளது. முற்றத் துறந்த பட்டினத்தாரின் ‘திருவேகம்பமுடையார்
திருவந்தாதியும்’ கந்த புராணமும் இத்தலத்தின்    சிறப்பையும், மூர்த்தியின்
புகழையும்  பலவாறு   புகழ்கின்றன.    மணிமேகலை,   தக்கயாகப் பரணி,
மத்தவிலாசப்பிரகசனம்,  தண்டியலங்காரம்  முதலிய  நூல்களிலும், பன்னிரு
திருமுறைகளில் பலவிடங்களிலும் இத்தலச் சிறப்பு பேசப்படுகின்றது.


     இறைவன் - திருவேகம்பர், ஏகாம்பரநாதர், ஏகாம்பரேஸ்வரர்

     இறைவி - ஏலவார்குழலி
     தலமரம் - மா
     தீர்த்தம் - சிவகங்கைத் தீர்த்தம்
     மூவர் பாடலும் பெற்றது.

     ஏகாம்பரேஸ்வரர் மூலவர் - மணல் (பிருதிவி) லிங்கம். உமாதேவியார்
கம்பை  நதிக்கரையில்  மணலால்  இலிங்கம் அமைத்து வழிபட, இறைவன்
ஆற்றில் வெள்ளம் வருமாறு செய்ய,  உமையம்மை இலிங்கத்தைத் தழுவிக்
காத்தாள் என்பது தலவரலாறு. தழுவிய போது இறைவன் தன் திருமேனியில்
அம்பிகையின் வளைத் தழும்பும் முலைச் சுவடும் ஏற்றுத் தழுவக் குழைந்தார்.
இதனால் இறைவனுக்குத் ‘தழுவக் குழைந்த பிரான்’ என்றும் பெயர்.


  “எள்கலின்றி இமையவர்கோனை ஈசனை வழிபாடு செய்வாள்போல்
  உள்ளத்துள்கி உகந்து உமைநங்கை வழிபடச் சென்றுநின்றவாகண்டு
  வெள்ளங்காட்டி வெருட்டிட வஞ்சி வெருவி ஓடித்தழுவ வெளிப்பட்ட
  கள்ளக்கம்பனை எங்கள் பிரானைக் காணக்கண் அடியேன்  
                                              பெற்றவாறே”
                                                 (சுந்தரர்)


     தற்போது  ‘கம்பா நதி’  ஆலயத்துள்  ஆயிரக்கால்   மண்டபத்திற்கு
முன்னால் குளமாகிய நிலையில் உள்ளது.


     தலமரம் மாமரம். ஆம்ரம் - மாமரம்.

     ஏகம்+ஆம்ரம் = ஏகாம்ரம் - ஒற்றை மாமரம்.