பக்கம் எண் :

22 திருமுறைத்தலங்கள்


     இம்மாவடியின்கீழ் இறைவன் எழுந்தருளியிருப்பதால்    இறைவன்
ஏகாம்அரநாதர் எனப் பெயர் பெற்றார். இப்பெயரே ஏகாம்பரநாதர் என்று
வழங்கலாயிற்று. “ஒரு மாவின்கீழ் அரையர்” என்னுந் தனிப்பாடல் தொடர்
இங்கு நினைக்கத்தக்கது. ‘கம்பர்’ என்பது தமிழில் வழங்கும் பெயர். ஊர்ப்
பெயர் கச்சி, காஞ்சி என்றாலும் கோயிலுக்குப் பெயர் ஏகம்பம் என்பதே.


     காஞ்சிபுர மண்டலம்  முழுமைக்கும்  தேவி,   காமாக்ஷியே யாவாள்.
ஆதலின் காஞ்சியில் எச்சிவாலயத்திலும் தனியாக அம்பாள் (மூல)   சந்நிதி
கிடையாது. எனினும் ஒவ்வொரு கோயிலிலும் உற்சவமூர்த்தமாக ஓர் அம்பாள்
சந்நிதி ஒரு பெயர் தாங்கி இருக்கும்.   அவ்வகையில்  இத்திருக்கோயிலில்
உள்ள அம்பாளுக்கு   ‘ஏலவார் குழலி’  என்று   பெயர்.      ஆயினும்
தேவஸ்தானத்தின் பெயர் ஸ்ரீ காமாக்ஷியம்பாள் சமேத ஸ்ரீ   ஏகாம்பரநாதர்
தேவஸ்தானம் என்றே வழங்கப்படுகிறது.


     மிகப் பெரிய கோயில். உயர்ந்த ராஜகோபுரம் ஒன்பது நிலைகளுடன்
கம்பீரமாகக் காட்சி தருகின்றது. நுழைவு வாயிலில்   முன்னால்  விநாயகரும்
முருகப்பெருமானும் இடம் மாறிக் காட்சி தருகின்றனர். இக்கோபுரம் விஜயநகர
மன்னரான கிருஷ்ணதேவராயரால் கி.பி.1509ல் கட்டப்பட்டதாகும். ‘ஒன்பது
நிலை தழீஇ ஓங்கும் கோபுரம்’ என்பது காஞ்சிப் புராணம்.


     இவ்வாயிலில்  நின்றால்  தண்ணென்ற  காற்று எப்போதும் வீசுவதை
அனுபவிக்கலாம். இவ்வாறு அனுபவித்த புலவரொருவர்தம் தனிப் பாடலில்
‘கம்பத்தடி காற்று’ என்று புகழ்ந்துள்ளார்.


     உள்ளே நுழைந்தால் நேரே  தெரிவது வாகன மண்டபம். இதற்குச்
சரபேச  மண்டபம்  என்று  பெயர்.  திருவிழாக்  காலங்களில்   சுவாமி
இங்கெழுந்தருளி, உபசாரங்களை ஏற்று, வாகனங்கள் மீது ஆரோகணித்து
திருவீதியுலாவுக்குப் புறப்படுவார்.


     (பெரும்பாலான தலங்களில் வாகனங்களின் அமைப்பு பக்கவாட்டிலேயே
அமைந்திருக்கும். சுவாமி நேராக நோக்குவார். ஆனால் இங்குச் சுவாமியின்
நோக்கும் வாகனங்களின் முகமும் ஒரே திசையில் - நேராகவே இருக்கும்.)



     விசாலமான  உள்  இடம்.  இடப்பால்  நந்தவனம். அடுத்து குளமாகத்
தேங்கியுள்ள  நிலையில்  கம்பையாறு உள்ளது. நேரே தெரிவது ஆயிரக்கால்
மண்டபம்.  சற்றுப்  பழுதடைந்துள்ளது.     இக்கோபுரம்   பல்லவகோபுரம்
எனப்படும்.  இக்கோபுர  வாயிலில்தான்,  தல  விநாயகராகிய  ‘விகடசக்கர
விநாயகர்’ உள்ளார்.