பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 23


     சலந்தரனை  அழிக்கத்  திருமால்  இறைவனை  வேண்டிப் பெற்ற
சக்கராயுதத்தை, வீரபத்திரர்மேல் ஏவியபோது  அவர்    அணிந்திருந்த
வெண்டலைமாலையில் உள்ள ஒருதலை அதை விழுங்கிவிட்டது. திருமால்
பெரிதும் வருந்தினார். இதையறிந்த விஷ்வக்சேனர் வீரபத்திரரிடம் சென்று
வேண்டி, அவர் சொல்லியவாறே பிரம கபாலம் சிரிக்கும் வகையில் விகடக்
கூத்தாடினார். அக்கூத்தைக் கண்டு பிரமகபாலம் சிரிக்க, சக்கரப்படை கீழே
விழுந்தது. அப்போது அருகிலிருந்த விநாயகர், அதை விரைந்து எடுத்துக்
கொண்டு, மறுமுறையும் விகடக்கூத்து ஆடுமாறு பணிக்க, அவரும் அவ்வாறே
ஆடினார். மகிழ்ந்து விநாயகரும் சக்கரப்படையைத் தந்தருளினார். ஆதலின்
விகடக் கூத்தினை விரும்பிக்கொண்டமையால் ‘விகடசக்கர விநாயகர்’ என்று
பெயர் பெற்றார். விநாயகரை வணங்கிக் கோபுர வாயில் கடந்து
வலப்பக்கமாகத் திரும்பிக் கோயிலுக்கு வரவேண்டும்.


     இதுவே  முறையான வழியாகும். பிற்காலத்தில் திருப்பணிகள் நடந்த
காலத்தில் அமைக்கப்பட்ட  மதில்  ‘வளைவு’  ராஜகோபுரத்திற்கு நேராக
இருப்பதால்  இன்று  மக்கள்  பெரும்பாலும்  இவ்வளைவின் வழியாகவே
செல்கின்றனர்.


     (சுவாமி  புறப்பாடு  இன்றும்  இம்முறையான  வாயில்  வழியாகவே
நடைபெறுவதை நேரில் காணலாம்.)


     கோயிலுக்கு முன்புள்ளது ‘திருக்கச்சி மயானம்’ கோயிலாகும்.   இது
வைப்புத் தலமாகும். அப்பரால் வைத்துப் பாடப்பட்டதாகும். அப்பாடல் :-

 
“மைப்படிந்த கண்ணாளும் தானும் கச்சி
        மயானத்தான் வார்சடையன் என்னின் அல்லால்
  ஒப்புடையான் அல்லன் ஓருருவனல்லன்
        ஓரூரனல்லன்ஓர்உவமன் இல்லி
  அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும்
        அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்
  இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன்
        இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொணாதே”

     எதிரில் வள்ளல் பச்சையப்பர் கட்டிய மண்டபம் உள்ளது. இம்மண்டபத்
தூண் ஒன்றில் அவருடைய உருவமும் உள்ளது.


     ஏகம்பத்தின்  நாற்புறத்திலும்  நான்கு கோயில்கள் உள்ளன. அவற்றுள்
கச்சிமயானம் ஒன்று. மற்றவை வாலீசம், ரிஷபேசம், சத்தியநாதேசம்  என்பன.
மறுபுறம் சிவகங்கைத் தீர்த்தம் உள்ளது.